search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீரராகவன்
    X
    வீரராகவன்

    20 குழந்தைகள் கடத்தப்பட்டதாக வாட்ஸ் அப்பில் வதந்தி - செய்யாறு வாலிபர் கைது

    செய்யாறு பகுதியில் 20 குழந்தைகள் கடத்தப்பட்டதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே நேற்று குழந்தை கடத்தும் கும்பல் என நினைத்து பெண் அடித்து கொலை செய்யப்பட்டார்.



    இந்த சம்பவத்தை தொடர்ந்து குழந்தை கடத்தல் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கந்தசாமி எச்சரிக்கை விடுத்தார்.

    போலீஸ் சூப்பிரண்டு பொன்னி வாட்ஸ் அப், பேஸ்புக்கில் வதந்தி பரப்புவது குறித்த கண்காணிக்க உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் செய்யாறு பகுதியில் நேற்று வாலிபர் ஒருவர் பேசிய வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப், பேஸ்புக்கிலும் வேகமாக பரவியது.

    அதில் பேசிய வாலிபர் எனது பெயர் வீரராகவன் (வயது35). செய்யாறு அருகே உள்ள புரிசை கிராமத்தில் இருந்து பேசுகிறேன்.

    செய்யாறு பக்கத்துல அதிகமா குழந்தைகளை கடத்துறாங்க இன்று இரவு பாராசூர் என்ற கிராமத்தில் 2 குழந்தைகளை தூக்கிட்டு போய்ட்டாங்க.

    ஏழியனூரில் வடமாநில கும்பல் 2 குழந்தைகளை கடத்திட்டாங்க. தாங்கல், உத்திரமேரூரில் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். அதனால உங்க குழந்தைளை நீங்கள் தான் பார்த்து கொள்ள வேண்டும்.

    செய்யாறு பக்கத்துல விநாயகபுரம் என்ற ஊரில் இந்திகாரனுங்க ஐஸ்பெட்டிக்குள் வைத்து குழந்தைகளை தூக்கி சென்றனர். பொதுமக்கள் துரத்தியதால் விட்டுட்டு ஓடிடாங்க.

    இதுவரை செய்யாறு பகுதியில் 20 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். அனைவரும் உஷாராக இருங்கள். வேலை முக்கியமில்லை. குழந்தைதான் முக்கியம்.

    குழந்தைகளை பத்திரமாக பார்த்து கொள்ளுங்க. அனைவரும் உஷாராக இருங்கள். முடிந்த வரை இதனை சேர் செய்து எவ்வாளவு குழந்தைகளை காப்பாற்ற முடியுமோ காப்பாற்றுங்கள் நன்றி என கூறியபடி இந்த வீடியோ பதிவு நிறைவு பெறுகிறது.

    வீரராகவின் வீடியோ செய்யாறு பகுதியில் வேகமாக பரவியது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

    சமூக வலைதளங்களை கண்காணித்த அணக்காவூர் போலீசார் இந்த வீடியோவை கண்டு திடுக்கிட்டனர்.

    இன்று அதிகாலை 4 மணிக்கு சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் தலைமையிலான போலீசார் புரிசை கிராமத்திற்கு சென்று வீரராகவனை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


    Next Story
    ×