என் மலர்
செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் இன்று பா.ம.க. சார்பில் கடையடைப்பு போராட்டம்
அரியலூர்:
காவிரி மேலாண்மை வாரி யம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விவசாயிகள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கடந்த 5-ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் பா.ம.க. சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தி.மு.க. ஆதரவு தெரிவித்திருந்தது.
இதையடுத்து தமிழகத்தில் இன்று சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. அரியலூர் மாவட்டத்தில் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டன. மாவட்டத்திற்கு உட்பட்ட திருமானூர், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
அரியலூரில் சின்னக் கடை, பெரியகடை தெரு மற்றும் பஸ் நிலைய பகுதி உள்ளிட்ட இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் அப்பகுதி பொது மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.
மேலும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இன்று மதியம் அரியலூர் ரெயில் நிலையத்தில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #Cauveryissue






