search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கணவரும் மனைவியும் பிணமாக கிடந்த பரிதாப காட்சி.
    X
    கணவரும் மனைவியும் பிணமாக கிடந்த பரிதாப காட்சி.

    பெருந்துறை அருகே கணவர்-மனைவி படுகொலை: போலீசார் தீவிர விசாரணை

    பெருந்துறை அருகே கணவர், மனைவியை படுகொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக் கோவில், சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(50). அதே பகுதியில் வீட்டின் பின்புறம் ரைஸ்மில் வைத்து நடத்தி வரும் இவர் கடந்த 11 வருடங்களுக்கு முன்னர் பெருந்துறையை அடுத்துள்ள துடுப்பதி பகுதியை சேர்ந்த மைதிலி(32) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு கார்த்தி(10) மற்றும் வைஷ்ணவி(8) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 6 மாதங்களாக துடுப்பதியில் உள்ள மைதிலியின் தாயார் வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று வருகின்றனர். இவர்களது வீட்டின் அருகிலேயே சுப்பிரமணியத்தின் தாயார் பொன்னம்மாள்(70) தனியே வசித்து வருகிறார்.

    உடல்நிலை சரியில்லாத நிலையில் இருந்த பொன்னம்மாள் நேற்று காலை 11 மணியளவில் வீட்டில் இருந்து கவுந்தப்பாடி மருத்துவமனைக்கு சென்று விட்டு மீண்டும் மாலை 4 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது மகனின் வீடு திறந்த நிலையில் கிடப்பதை கண்டு சந்தேகமடைந்து உள்ளே சென்று பார்த்தார்.

    அங்கு வீட்டின் ஹாலில் சுப்பிரமணியம் தரையிலும், மனைவி மைதிலி அருகில் இருந்த கட்டில் மீதும் இறந்து பிணமாக கிடந்தனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போடவே, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்,

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் இருவரின் உடலையும் கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டார்.

    அப்போது வீட்டில் மைதிலி எழுதிய கடிதம் கிடைத்தது.

    அந்த கடிதத்தில் “ எனது கணவர் சுப்பிரமணி தனது தொழில் விரிவாக்கத்திற்காக நசியனூரில் உள்ள ஒரு வங்கியில் 90 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அந்த கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் கடந்த சில நாட்களாகவே மிகுந்த மன உளைச்சலுடன் வீட்டில் இருந்து வந்தார்.

    இது தொடர்பாக அவரிடம் நான் கேட்ட போது, எங்கள் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு என்னை தகாத வார்த்தைகளால் அவர் திட்டினார். இதனால் ஆத்திரமடைந்த நான் அருகில் கிடந்த கரண்டியால் அவரை தாக்கியதில் வீட்டின் ஹாலில் மயங்கி விழுந்தார்.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை கண்ட நான், மயக்கம் தெளிந்து எழுந்தால் மீண்டும் என்னிடம் சண்டையிடுவார் என நினைத்து அவரது கழுத்தில் கால் வைத்து மிதித்ததில் அவர் இறந்து போனார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த நான், இனிமேல் வாழத்தகுதியில்லை என நினைத்து எனது உயிரை மாய்த்துக் கொள்கிறேன்” இவ்வாறு எழுதியிருந்தார்.

    இந்த சம்பவம் குறித்து ஈரோடு எஸ்பி சிவக்குமார் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கோவை சிறப்பு தடவியல் நிபுணர்கள் கொண்ட குழுவினர் தடயங்களை சேகரித்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கணவரை மனைவி தான் கொலை செய்துள்ளார் என்று முதலில் போலீசார் எண்ணிணாலும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

    மனைவி மட்டும் கணவரை அடித்தால் திருப்பி கணவரும் தாக்கியிருப்பார் இதனால் மனைவி மட்டும் தனியாக கணவரை கொல்ல வாய்ப்பில்லை என்று போலீசார் நினைக்கிறார்கள்.

    ஆகவே முன்பகை காரணமாக கணவன்- மனைவியை கொன்று விட்டு மனைவியே கணவரை கொன்று கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டிருப்பதாக கொலையாளிகள் திட்டமிட்டு நாடகமாடி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதனால் கணவன்- மனைவியை கொலை செய்த கொலையாளிகள் யார்? எதற்காக கொன்றார்கள்? என்ற புதிய கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    மேலும் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டதாக கருதப்படும் மைதிலி அவர்தான் கைப்பட கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டாரா?

    அது அவரது கையெழுத்து தானா? என்று தீவிர விசாரணை நடத்துகிறார்கள்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    Next Story
    ×