search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கணவரை கொன்றவரை பழிவாங்க ஓட்டலில் ரவுடிகளுடன் ஆலோசனை நடத்திய பெண் தாதா கைது
    X

    கணவரை கொன்றவரை பழிவாங்க ஓட்டலில் ரவுடிகளுடன் ஆலோசனை நடத்திய பெண் தாதா கைது

    கணவரை கொன்றவரை பழிவாங்க ஓட்டலில் ரவுடிகளுடன் ஆலோசனை நடத்திய பெண் தாதா மற்றும் ரவுடிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலில் பிரபல சாராய வியாபாரியாக திகழ்ந்தவர் ராமு. இவருக்கு வினோதா, எழிலரசி ஆகிய 2 மனைவிகள்.

    இதில் ராமுவுக்கும் வினோதாவுக்கும் இடையே பிரிவு ஏற்பட்டு ராமு எழிலரசியுடன் வாழ்ந்து வந்தார். இந்த கோபத்தில் ராமு, எழிலரசி இருவரையும் தீர்த்து கட்ட வினோதா தனது ஆட்களை அனுப்பி வைத்தார்.

    அவர்கள் காரைக்கால் கடைவீதியில் வைத்து ராமு, எழிலரசியை மடக்கி தாக்கினார்கள். இதில் ராமு கொலை செய்யப்பட்டார். எழிலரசி காயத்துடன் தப்பினார்.

    இதன் பிறகு எழிலரசி தனது கணவர் கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்கினார். ராமுவின் முதல் மனைவி காரைக்கால் சென்றுவிட்டு சென்னை திரும்பியபோது சீர்காழி அருகே அவரை மடக்கி எழிலரசி ஆட்கள் கொலை செய்தனர்.

    மேலும், தனது கணவர் கொலைக்கு முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி. சிவக்குமார் காரணம் என கருதி அவரையும் தீர்த்துகட்ட எழிலரசி திட்டமிட்டார். அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வி.எம்.சி. சிவக்குமாரை எழிலரசி ஆட்கள் கொலை செய்தார்கள்.

    இதில் எழிலரசியும், கூலிப்படையினரும் கைது செய்யப்பட்டனர். எழிலரசி புதுவை ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். சமீபத்தில் அவர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.

    தனது உயிருக்கு ஆபத்து என கருதும் எழிலரசி ரகசியமான இடத்தில் தங்கி இருந்து போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.

    இந்த நிலையில் காமராஜர் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் எழிலரசி ஏராளமான ரவுடிகளுடன் அமர்ந்து சதிதிட்ட ஆலோசனை நடத்துவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அதிரடிப்படை போலீசார் ஓட்டலை சுற்றி வளைத்தனர். அப்போது மாநாட்டு அறையில் விருந்து உபசரிப்புக்கு மத்தியில் அவர்கள் அடுத்த கொலை சம்பந்தமாக சதி திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர்.

    ராமுவை கொலை செய்ததில் முக்கிய குற்றவாளியாக முதல் மனைவி வினோதாவின் தங்கை கணவர் ஆனந்த் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனந்தை கொல்வதற்கு அவர்கள் ஆலோசித்தது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கிருந்த அனை வரையும் கைது செய்தார்கள். எழிலரசி மற்றும் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அதில் வி.எம்.சி. சிவக்குமார் கொலை வழக்கில் கைதாகாமல் தலைமறைவாக இருந்த ரவுடி விக்ரமும் ஒருவர். இவர்கள் தவிர பலர் பிரபல தாதா ரவுடி மர்டர் மணிகண்டனின் கூட்டாளிகள் ஆவர். அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

    கைதான அனைவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் பயன்படுத்திய ஒரு கார், 12 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன. 5 கத்தி உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    போலீசார் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்ததால் பெரிய கொலை சதிதிட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×