என் மலர்
செய்திகள்

பெருந்துறையில் நள்ளிரவில் 7 வீடுகளில் தீ விபத்து: கணவன்-மனைவி பலி
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள பணிக்கம்பாளையம் மேற்கு காலனி பகுதியில் தங்கவேல் என்பவருக்கு சொந்தமான 7 வீடுகள் உள்ளன.
இந்த வீடுகளின் மேற் கூரை தென்னை ஓலை மற்றும் தகர ஷீட்டால் வேயப்பட்டிருந்தன. அனைத்து வீடுகளிலும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் வாடகைக்கு வசித்து வருகிறார்கள்.
ஒரு வீட்டில் மேற்கு வங்காள மாநிலம் பிங்கல் கன்ச் தாலுகா திம்நகர் பகுதியை சேர்ந்த வர்ஷின் மண்டல் (வயது 46), அவரது மனைவி நோமிதா (40) ஆகியோர் வசித்தனர்.
இவர்கள் பெருந்துறை பகுதியில் உள்ள துணி தயாரிப்பு கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். நேற்று இரவு இவர்கள் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர்.
நள்ளிரவு 11 மணி அளவில் இவர்களது வீட்டில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தென்னை ஓலை, தகர ஷீட் மேற்கூரை என்பதால் தீ மளமளவென பரவியது.
தீ பயங்கரமாக எரிந்ததால் வர்ஷின் மண்டல், அவரது மனைவி நோமிதா ஆகியோரால் வெளியே வர முடியவில்லை. உள்ளே தீயில் சிக்கி உடல் கருகினர்.
வர்ஷின் வீட்டில் பிடித்த தீ மளமளவென அங்கிருந்த 7 வீடுகளுக்கும் பரவியது. இதில் 7 வீடுகளும் தீப்பற்றி எரிந்தன. வர்ஷின் வீட்டின் அருகில் வசித்த புல்புல்மண்டல், அவரது மனைவி பாருதி ஆகியோரின் உடலிலும் தீப்பிடித்தது.
உடலில் பிடித்த தீயுடன் அவர்கள் வெளியே ஓடி வந்தனர். மற்ற வீடுகளில் வசித்தவர்களும் வீடு தீப்பிடித்து எரிந்ததால் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து சத்தமிட்டனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தக வல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு நிலைய அலுவலர் நாகேஸ்வரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட் டது. முதலில் தீப்பிடித்த வர்ஷினின் வீடு பூட்டியிருந்தது. வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது வர்ஷின் மண்டலும், அவரது மனைவி நோமிதாவும் தீயில் கருகி பரிதாபமாக இறந்து கிடந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த புல்புல்மண்டல், அவரது மனைவி பாருதி ஆகியோர் உடனடியாக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ஆபத்தான நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






