என் மலர்tooltip icon

    செய்திகள்

    உழவர் பேரியக்கம் சார்பில் அனைத்து விவசாய சங்கங்களுடன் சென்னையில் நாளை ஆலோசனை: ஜி.கே.மணி
    X

    உழவர் பேரியக்கம் சார்பில் அனைத்து விவசாய சங்கங்களுடன் சென்னையில் நாளை ஆலோசனை: ஜி.கே.மணி

    சென்னையில் உழவர் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாய சங்கங்களுடன் நாளை (20-ந் தேதி) ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாக ஜி.கே.மணி கூறியுள்ளார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடியில் வேதாரண்யம், கீழ்வேளுர், நாகை ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் பா.ம.க பொதுக்குழு கூட்டம் மாநில துணை பொதுச் செயலாளர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பா.ம.க கட்சி மாநில தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாநில அரசு காவிரி மேலாண்மை நடுவர் நீதிமன்ற தீர்ப்பின் படி கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மத்திய- மாநில அரசுகள் தமிழக விவசாயிகள் நலனில் அக்கறை காட்டாத அரசாகவும், வஞ்சிக்கும் அரசாகவும் உள்ளது.

    தமிழகத்தில் உள்ள கட்சிகளில் கொள்கை, கோட்பாடு மற்றும் போராட்டங்கள் நடத்துகின்ற ஒரே கட்சி பா.ம.க.தான்.

    தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை முறையாக வழங்கப்பட வில்லை.

    தற்போது மகாராஷ்டிரா மாநிலம் போன்று விவசாயிகளின் தற்கொலை சாவு தமிழகத்தில் அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் அரசுகள் தான். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்குரிய எந்தவித கடன்களும் முறையாக வழங்கப்படுவதில்லை.

    அதே போல விவசாயத்திற்குரிய ஈடுபொருள்களும் மானிய விலையில் வழங்காமல் தொடர்ந்து அரசுகள் ஏமாற்றி வருகிறது.

    இதனால் இதுபற்றி ஆலோசனை நடத்த சென்னையில் உழவர் பேரியக்கம் சார்பில் நாளை (20-ந் தேதி) தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாய சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

    வேதாரண்யம் கடலில் மூழ்கி இறந்த 5 மாணவர்களின் குடும்பங்களுக்கு அரசு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×