என் மலர்
செய்திகள்

தரம் உயர்த்தப்பட்ட மருந்தகங்கள் மூலம் 20 ஆயிரம் கால்நடைகள் பயன்பெறும்: ராஜேந்திர பாலாஜி
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டங்களில் கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக கால்நடை கிளை நிலையத்திலிருந்து தரம் உயர்த்தப்பட்ட புதிய கால்நடை மருந்தகங்களை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.கால்நடைகளுக்கு குடல்புழு நீக்க மருந்துகளை வழங்கி அவர் பேசியதாவது:-
தமிழக அரசு கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர்கள் பயன்பெறக்கூடிய வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.
அதனடிப்படையில் விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டம், கோழி அபிவிருத்தி திட்டம், தீவன அபிவிருத்தித் திட்டம், கோமாரி நோய்த் தடுப்பூசித் திட்டம், கால்நடை பாதுகாப்புத் திட்டம் போன்ற சிறப்புத்திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன.
விருதுநகர் மாவட்டத்தில் 5 கால்நடை மருத்துவ மனைகளும், 74 கால்நடை மருந்தகங்களும், 55 கால்நடை கிளை நிலையங்களும் செயல்பட்டு வருகிறது. கால்நடை வளர்ப்போர்கள் மென்மேலும் பயன்பெறும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் கால்நடை கிளை நிலையங்களை கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்துவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து சிவகாசி வட்டம் நாரணாபுரம் கிராமத்திலும், ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம் கோட்டைப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் கால்நடை கிளை நிலையங்களை, கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது தரம் உயர்த்தப்பட்டுள்ள ஒவ்வொரு கால்நடை மருந்தகத்திற்கும் ரூ.10,08,848 மதிப்பீட்டில் உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வழங்குவதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒவ்வொரு கால்நடை மருந்தகத்திலும் ஒரு கால்நடை உதவி மருத்துவர், ஒரு கால்நடை ஆய்வாளர் நிலை 1 மற்றும் ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஆகிய பதவிகள் நிரப்பப்பட்டுள்ளன.
மேலும், நாரணாபுரம் கால்நடை மருந்தகத்தில் நாரணாபுரம், ஜமீன்சல்வார்பட்டி, ஆலமரத்துப்பட்டி, வாடியூர், வி.சொக்கலிங்காபுரம், பள்ளபட்டி போன்ற கிராமங்களில் உள்ள 10,510 கால் நடைகளும், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் கோட்டைப்பட்டி கால்நடை மருந்தகத்தில் கோட்டைப்பட்டி, திருவண்ணாமலை, அத்திகுளம், தெய்வேந்திரி, ஸ்ரீவில்லிபுத்தூர் உட்கடை கிராமங்கள் என போன்ற கிராமங்களிலுள்ள 9,505 கால்நடைகளும் பயன் பெறுகின்றன.
புதிய கால்நடை மருந்தகங்களால் தமிழக அரசின் மூலம் செயல் படுத்தப்படும் சிறப்புத் திட்டங்களான விலையில்லா கறவைப்பசுக்கள் மற்றும் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டம், கோழி அபிவிருத்தி திட்டம், தீவன அபிவிருத்தித் திட்டம் , கோமாரி நோய்த் தடுப்பூசித் திட்டம், கால்நடை பாதுகாப்புத் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் இந்தப் பகுதியிலுள்ள விவசாய பெருங்குடி மக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர்கள் பயன்பெறுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா, மண்டல இணை இயக்குநர் (கால் நடை) ஜெகதீசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.