என் மலர்
செய்திகள்

காரைக்குடி-கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரை ரெயில் பாதை திட்டத்தை கைவிடக்கூடாது: ராமதாஸ்
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு கிழக்குக் கடற்கரையோரம் தொடர்வண்டிப் பாதை அமைக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக காரைக்குடி முதல் கன்னியாகுமரி வரை புதிய பாதை அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக தொடர்வண்டி வாரியம் அறிவித்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதால் போதிய வருவாய் கிடைக்காது என்பதால் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
கிழக்குக் கடற்கரையோர தொடர்வண்டிப் பாதை என்பது தமிழகத்தின் வளர்ச்சியையும், தமிழ்நாட்டு மக்களின் வசதியையும் கருத்தில் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் கனவுத் திட்டமாகும். பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அரங்க.வேலு தொடர்வண்டித்துறை அமைச்சராக இருந்த போது தான் இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டு 2008-09 ஆண்டுக்கான தொடர்வண்டித்துறை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் ஓர் அங்கமாக சென்னை பெருங்குடியிலிருந்து மாமல்லபுரம், புதுச்சேரி, கடலூர் வரை 178 கிலோமீட்டர் தொலைவுக்கு தொடர்வண்டிப் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அத்திட்டத்திற்கான ரூ.523 கோடி நிதி ஒதுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடலூர் முதல் காரைக்குடி வரை இப்போதுள்ள பாதையை மேம்படுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், காரைக்குடியிலிருந்து இராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரிக்கு 463 கிமீ புதிய பாதை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு ஆய்வுகளும் நடத்தப்பட்டன. இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்தும்படி பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் காரைக்குடி-கன்னியாகுமரி புதியபாதைத் அத்திட்டத்தை கைவிடுவதற்காக தொடர்வண்டி வாரியம் கூறியுள்ள காரணங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவையாகும்.
சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்குக் கடற்கரை தொடர்வண்டிப்பாதையில் முதலீடு செய்யும் அளவுக்கு வருவாய் கிடைக்காது என்பது தவறான மதிப்பீடு ஆகும். சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி வழியாக அமைக்கப்பட்டுள்ள பாதையில் கடுமையான நெரிசல் நிலவி வருகிறது. இந்த வழித்தடத்தை இரட்டைப் பாதையாக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன என்ற போதிலும், நெரிசலைக் குறைக்க இரட்டைப் பாதைக் கூட போதுமானதல்ல என்பது தான் உண்மை. நெரிசலைக் குறைப்பதற்காக சென்னையிலிருந்து விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி வழியாக தொடர் வண்டிகளை இயக்கினாலும் கூட திருச்சிக்கு அப்பால் ஏற்கனவே உள்ள பாதையில் தான் இயக்கப்பட வேண்டும். எனவே, இந்த பாதையும் நெரிசலைக் குறைப்பதற்கான தீர்வு அல்ல. நெரிசலுக்கான தீர்வு கிழக்குக் கடலோர தொடர்வண்டிப் பாதை தான்.
கிழக்குக் கடற்கரையோரத் தொடர்வண்டிப் பாதை அமைக்கப்பட்டால் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வழியாக சென்னைக்கு சுற்று வட்டப் பாதையில் தொடர்வண்டிகளை இயக்க முடியும். அதுமட்டுமின்றி, இந்தப் பாதையில் சுற்றுலாத் தலங்களும், ஆன்மிகத் தலங்களும் இருப்பதால் பயணிகள் ஆதரவுக்கு ஒருபோதும் குறைவு இருக்காது. இவற்றுக்கெல்லாம் மேலாக தூத்துக்குடி முதல் சென்னை வரையிலான கிழக்குக் கடல் பகுதியில் அதிக எண்ணிக்கையில் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சரக்குகளை கொண்டு செல்ல தொடர்வண்டிகள் தேவை. இப்பாதையில் சரக்குத் தொடர்வண்டிகளை இயக்குவதன் மூலமாக மட்டுமே மிகக் குறுகிய காலத்தில் முதலீட்டை திரும்பப் பெற முடியும். எந்த வகையில் பார்த்தாலும் இந்தப் பாதை அவசியத் தேவையாகவும், லாபம் தரும் ஒன்றாகவும் இருக்கும் நிலையில் அதைக் கைவிடுவது நியாயமல்ல.
பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்வண்டித்துறை இணையமைச்சர்களாக இருந்த போது அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. திண்டிவனம் நகரி இடையே புதிய பாதை அமைக்கும் பணி நிதி ஒதுக்கப்படாததால் முடங்கியுள்ளது. மொரப்பூர் தருமபுரி இணைப்புப் பாதைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டும் இன்னும் நிதி ஒதுக்கப்படாததால் பணிகள் தொடங்கப்படவில்லை. இதுதொடர்பாக மத்திய அரசுடன் பேச்சு நடத்தி தமிழகத்திற்கான திட்டங்களை விரைவுபடுத்த வேண்டிய பினாமி அரசு பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மாநில உரிமைகளை காற்றில் பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறது. தொடர்வண்டித் திட்டங்களுக்கான மொத்த செலவில் 50 விழுக்காட்டை மாநில அரசு ஏற்றுக்கொண்டால் மீதமுள்ள தொகையை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு தயாராக உள்ள நிலையில், அதைப் பயன்படுத்திக் கொள்ள மறுப்பது புத்திசாலித்தனமல்ல.
எனவே, மத்திய அரசுடன் தமிழக அரசு பேச்சு நடத்தி கிழக்குக் கடற்கரையோர தொடர்வண்டிப் பாதைத் திட்டத்தை செயல்படுத்த வைக்க வேண்டும். திட்டச் செலவுகளில் பாதியை தமிழக அரசே ஏற்றுக்கொண்டு தமிழகத்தில் கிடப்பில் கிடக்கும். தொடர்வண்டித் திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக தொடர்வண்டித்துறை அமைச்சரை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நேரில் சந்தித்துப் பேசுவதுடன், மக்களவையிலும் இதற்காகக் குரல் கொடுப்பார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






