என் மலர்
செய்திகள்

மரக்காணம் அருகே அரசு ஆஸ்பத்திரி டாக்டர் திடீர் மாயம்: கடத்தப்பட்டாரா?
புதுவை அருகே உள்ள கனகசெட்டிக்குளம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 46). இவர் மரக்காணம் அருகே உள்ள முருக்கேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த 27-ந் தேதி குமார் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு காரில் புறப்பட்டு சென்றார். மாலையில் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குமாரின் மனைவி சங்கீதா அவரை பல இடங்களில் தேடினார். அவரை பற்றி தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
இதையடுத்து சங்கீதா பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாயமான டாக்டர் குமாரை கண்டுபிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் தீவிர விசாரணை நடத்தினர். அதில் டாக்டர் குமாரின் கார் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அங்கு போலீசார் விரைந்து சென்று காரை கைப்பற்றினர்.
டாக்டர் குமாரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. எனவே அவரை மர்ம மனிதர்கள் கடத்தி சென்றார்களா? என்று போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் கூவாத்தூரில் டாக்டர் குமார் கிளினிக் நடத்தி வந்தார். அங்கு விசாரணை நடத்த போலீசார் விரைந்துள்ளனர்.
அரசு ஆஸ்பத்திரி டாக்டர் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.