என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டத்தில் நடிகர் குண்டு கல்யாணம் பேசிய காட்சி.
    X
    கூட்டத்தில் நடிகர் குண்டு கல்யாணம் பேசிய காட்சி.

    அ.தி.மு.க.வில் உள்ள இளைஞர்கள் பட்டாளம் தினகரன் பின்னால் உள்ளது: நடிகர் குண்டு கல்யாணம்

    அ.தி.மு.க.வில் உள்ள இளைஞர்களின் பட்டாளம் தினகரன் பின்னால் உள்ளது என ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகர் குண்டு கல்யாணம் பேசினார்.
    ஈரோடு:

    அ.தி.மு.க. (அம்மா) அணி சார்பில் கட்சியின் 46-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் ஈரோடு திருநகர் காலனியில் நடந்தது.

    கூட்டத்தில் கட்சியின் தலைமை கழக பேச்சாளரும், நடிகருமான குண்டு கல்யாணம் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது அவர் நலமுடன் இருப்பதாகவே தம்பிதுரையும், மதுசூதனனும் கூறினார்கள்.

    ஜெயலலிதா தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படும்போது நான் தூரத்தில் இருந்து அவரை பார்த்தேன். ஆனால் தற்போது துணை முதல்-அமைச்சராக இருக்கும் பன்னீர்செல்வம், ஜெயலலிதாவை பார்க்கவே விடவில்லை.

    ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்த வீடியோ ஆதாரம் சசிகலாவிடம் உள்ளது. இந்த ஆதாரத்தை அரசியலுக்காக பயன்படுத்த அவர் விரும்பவில்லை அதுவே கோர்ட்டில் கேட்கும்போது கட்டாயம் வீடியோ ஆதாரம் வழங்கப்படும். அந்தநேரம், பொய் சொல்லி ஆட்சி புரியும் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்தின் முகத்திரை கிழியும்.

    அ.தி.மு.க. உள்ள இளைஞர்களின் பட்டாளம் தினகரன் பின்னால் உள்ளது. நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க. அண்ணன் தினகரன் தலைமையில் விரைவில் உண்மையான அ.தி.மு.க. ஆட்சி மலரும்.

    இப்போது நடந்து வரும் ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதத்தில் ஆட்சி முடிந்து விடும். சசிகலாவின் ஆதரவாலும், முயற்சியாலும், முதல்வர்கள் ஆன பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இவர்களின் அரசியல் வாழ்வு இனி கேள்வி குறிதான். இவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க தமிழக மக்கள் காத்து கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×