என் மலர்
செய்திகள்

கதிராமங்கலத்தில் குடி நீரில் எண்ணெய் படலம்: பொதுமக்கள் சாலை மறியல்
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் ஆழ்துளை கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறார்கள். கடந்த 30-ந் தேதி எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டது.
இதனால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். போராட்டம் தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை விடுவிக்க கோரி கடையடைப்பு போராட்டம் நடைபெற்ற வருகிறது.
இந்த நிலையில் கதிராமங்கலம் பொது மக்களுக்கு இன்றுகாலை குடி நீர் சப்ளை செய்யப்பட்டது. இந்த தண்ணீரில் எண்ணெய் படலம் கலந்து இருப்பதாகவும் மஞ்சள் நிறத்தில் குடி நீர் இருந்ததாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
அவர்கள் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு உருவானது. கதிராமங்கலத்தில் இன்று மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வில்லை. நெசவாளர்கள், பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கதிராமங்கலம் பிரச்சினை தொடர்பாக அனைத்து கல்லூரி மாணவர்களையும் ரகசியமாக ஒன்று திரட்டி போராட மாணவர்கள் குழு முடிவு செய்துள்ளனர்.
கும்பகோணத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பள்ளி மாணவர்களை திரட்ட உள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அனைத்து பள்ளி கல்லூரி மாணவர்களை ஒன்று திரட்டி ஒரே இடத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி காட்டியது போல் கதிராமங்கலத்தின் நிலையை அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் மாணவர்கள் போராட்ட குழுவினர் வாட்ஸ் ஆப் மூலம் மாணவர்களை ஒன்றிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இது போல் ஒன்றிணைந்த மாணவர்களை இன்னும் ஒரிரு நாட்களில் கும்ப கோணத்தில் உள்ள முக்கிய இடங்களில் கூடி ஜல்லிக்கட்டு போராட்டம் போல் கதிராமங்கலம் பிரச்சினையையும் திணறடிக்க முடிவு செய்துள்ளனர்.






