search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபநாசம் அணை நீர்மட்டம் 2 அடி உயர்வு
    X

    பாபநாசம் அணை நீர்மட்டம் 2 அடி உயர்வு

    நெல்லை மாவட்டத்தில் பெய்த மழையினால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு மிதமான அளவு நீர் வரத்து இருந்தது. நேற்று 17 அடியாக இருந்த பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை 19 அடியாக உயர்ந்தது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவ மழைகள் பெய்யாததால் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. தென்மேற்கு பருவ மழையும், வட கிழக்கு பருவ மழையும் ஏமாற்றியதால் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அணைகளில் நீர்மட்டம் மிக குறைவாக உள்ளது. குளங்கள் வறண்டு விட்டன. குடிநீர் தேவைக்கு கூட தண்ணீர் தட்டுப்பாடு ஆகும் நிலை உருவாகி உள்ளது.

    இந்த நிலையில் நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 5 நாட்களாக தென்மேற்கு பருவ காற்று வீசி வருகிறது. சில பகுதிகளில் சாரல் மழையும் பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தென்மேற்கு பருவ மழை கைகொடுத்தால் மட்டுமே நெல்லை மாவட்டத்தில் ஓரளவு விவசாயம் நடைபெற வாய்ப்பு உள்ளது என கருதப்படுகிறது.

    தென்காசி, குற்றாலம், பாபநாசம் பகுதியில் நேற்று காலையில் கடும் வெயில் அடித்தது. பின்பு மாலையில் காற்று வீசியது. குற்றாலம் மலைப்பகுதியில் லேசான மழை தூறியது. கடையநல்லூர் மலைப்பகுதியில் அடவிநயினார், குண்டாறு அணைப் பகுதியில் மழை பெய்தது. அடவிநயினார் அணையில் 15 மில்லிமீட்டர் மழையும், குண்டாறு அணையில் 4 மில்லிமீட்டர் மழையும் பதிவானது.

    மாவட்டத்தின் பிற பகுதிகளில் எங்குமே மழை இல்லை. எனினும் நேற்று முன்தினம் பெய்த மழையினால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு மிதமான அளவு நீர் வரத்து இருந்தது. இதன் காரணமாக நேற்று 17 அடியாக இருந்த பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை 19 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 444.33 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது.

    அணையில் இருந்து 267.25 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 16.40 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 33.23 அடியாகவும் உள்ளன. இதேபோல கடனா அணை நீர்மட்டம் 44.40 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 26.75 அடியாகவும், கருப்பா நதி அணை நீர்மட்டம் 27.29 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 22.25 அடியாகவும் உள்ளன.

    அடவிநயினார் அணை நீர்மட்டம் 28.50 அடியாக இருக்கிறது. இன்று காலையில் மலைப்பகுதியில் இதமான காற்று வீசியது. குற்றாலம் மெயின் அருவியில் குறைவாக தண்ணீர் விழுந்தது. இன்னும் ஓரிரு நாட்களில் தென்மேற்கு பருவ மழை முழுமையாக பெய்ய தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×