என் மலர்
செய்திகள்

அரியாங்குப்பத்தில் இரும்பு கடையில் சிலிண்டர் வெடித்து தொழிலாளி பலி
பாகூர்:
அரியாங்குப்பம் சொர்ணா நகரில் சர்தார் பாஷா என்பவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இந்த இரும்பு கடையில் புதுவை சாரம் கவிக்குயில் நகரை சேர்ந்த வேலாயுதம் என்ற சம்பத் (வயது 43). என்பவர் வெல்டராக பணிபுரிந்து வந்தார்.
வழக்கம் போல் இன்று காலை வேலாயுதம் இரும்பு கடை எதிரே உள்ள காலி மனையில் வைத்து தார் பேரலை கியாஸ் வெல்டிங் மூலம் வெட்டும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது தார் பேரல் குபீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அருகே உள்ள சிலிண்டரில் தீ பரவி டமார் என்று பெரும் ஓசையுடன் வெடித்து சிதறியது. இதில் வேலாயுதம் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.
அதன் பின்னர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தகவல் அறிந்த புதுவை தாசில்தார் தயாளன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறும் போது, இந்த பழைய இரும்பு கடையில் இதுபோன்று அடிக்கடி தீ விபத்து சம்பவங்கள் நடைபெறுவதாகவும், எனவே, பழைய இரும்பு கடையை குடியிருப்பு பகுதியில் நடத்த கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
சிலிண்டர் வெடித்து உடல் சிதறி பலியான வேலாயுதத்துக்கு வித்யா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப பிடத்தக்கது.