search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைத்ததில் கடும் குளறுபடி
    X

    மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைத்ததில் கடும் குளறுபடி

    • படித்த இளைஞர்கள் பலர் தங்களது செல்போனில் வெப்சைட்டுக்குள் சென்று எளிதில் ஆதாரை இணைத்து விடுகிறார்கள்.
    • ஆதார் இணைப்பை இறுதி செய்வதற்கு முன்பு அதிகாரிகள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

    100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதாரை பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து அரசு அறிவுறுத்தி வருகிறது.

    படித்த இளைஞர்கள் பலர் தங்களது செல்போனில் வெப்சைட்டுக்குள் சென்று எளிதில் ஆதாரை இணைத்து விடுகிறார்கள். மற்ற பொதுமக்கள் கம்ப்யூட்டர் மையம் அல்லது மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று மின் இணைப்புடன் ஆதாரை இணைத்து வந்தனர்.

    இதற்காக தமிழ்நாடு முழுவதும் 2,811 மின்சார அலுவலகங்களில் சிறப்பு கவுண்டர்கள் மூலமும் ஆதார் எண்களை இணைத்து கொடுக்கின்றனர்.

    இதில் இதுவரை மொத்தம் 2.59 கோடி மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்து உள்ளார். ஆதார் எண்ணை இணைக்க இந்த மாதம் 15-ந்தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளதால் இதுவரை இணைக்காதவர்கள் மின்வாரிய அலுவலகம் சென்று பதிவு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்ததில் சில இடங்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரியவந்துள்ளது. அதாவது வீட்டு உரிமையாளர்களுக்கு தெரியாமல் அவர்களது ஆதார் எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    இதுபற்றி அனைத்து பகிர்மான பிரிவு தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர்களுக்கு மின்வாரிய இயக்குனர் (வினியோகம்) அனுப்பி உள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    நேற்று இரவு 7 மணி நிலவரப்படி மின் இணைப்புடன் ஆதார் எண்களை 97.98 சதவீதம் பேர் இணைத்து உள்ளனர்.

    ஆனால் இப்பணியை ஆய்வு செய்ததில் உரிமையாளர், குத்தகைதாரர், இணை உரிமையாளரின் ஆதார் எண்கள் அவர்களுக்கு தெரியாமலேயே மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    ஆதார் இணைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது என்பதை காட்டுவதற்காகவே அதிக அளவிலான மின் இணைப்பு எண்களுடன் தொடர்பில்லாத ஆதார் எண்கள் இணைக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற செயல்கள் மூலம் திட்டத்தின் நோக்கமே தோற்கடிக்கப்படுகிறது.

    எனவே ஆதார் இணைப்பை இறுதி செய்வதற்கு முன்பு அதிகாரிகள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். தகுதியான நபர்களின் ஆதார் எண்ணை மட்டுமே சேவை இணைப்புகளுடன் இணைக்கவும், அதை உறுதி செய்யவும் அறிவுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×