search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    இந்த அன்பை போல வேறேது... 17 வருட ஆசிரியை மாற்றப்பட்டதால் கட்டிப்பிடித்து கதறிய மாணவர்கள்
    X

    ஆசிரியை சந்தான லட்சுமியை சூழ்ந்து கொண்டு மாணவர்கள் கதறி அழுத காட்சி.

    இந்த அன்பை போல வேறேது... 17 வருட ஆசிரியை மாற்றப்பட்டதால் கட்டிப்பிடித்து கதறிய மாணவர்கள்

    • பள்ளி குழந்தைகளின் பாசப்பிடியில் இருந்து வெளியேற முடியாமல் ஆசிரியை தவித்தார்.
    • ஆசிரியை மாற்றப்பட்ட தகவல் அறிந்து பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களும் வந்தனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை பெல் குடியிருப்பு வளாகத்தில் அரசு நிதியுதவி பெறும் தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 17 ஆண்டுகளாக சந்தான லட்சுமி என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

    நீண்ட நாட்களாக மாணவ, மாணவிகளுடன் நல்ல முறையில் பழகி எளிமையான முறையில் கல்வி கற்பித்து வருவதால் அனைவருக்கும் பிடித்த ஆசிரியராகவும், மாணவர்களின் மனம் கவர்ந்த ஆசிரியராகவும் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் அவரை வேறு பள்ளிக்கு மாறுதல் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

    இதனை அறிந்த மாணவ, மாணவிகள் வேறு பள்ளிக்கு செல்லக்கூடாது என தடுத்து கதறி அழுதனர். பள்ளி குழந்தைகளின் பாசப்பிடியில் இருந்து வெளியேற முடியாமல் ஆசிரியை தவித்தார்.

    பள்ளி குழந்தைகள் ஆசிரியையை சூழ்ந்துகொண்டு தேம்பி தேம்பி அழுதனர். மிஸ் நீங்க போகாதீங்க மிஸ் ப்ளீஸ்.. ப்ளீஸ்.... என்று சில குழந்தைகள் மழலை குரலில் அழுது கொண்டே கூறினர்.

    அதனை பார்த்து ஆசிரியருக்கும் கண்ணீர் பெருக்கெடுத்தது. கண்ணீரை துடைத்துக்கொண்டே பள்ளி குழந்தைகளுக்கு அவர் ஆறுதல் கூறினார்.

    அதனை பார்த்த மற்ற ஆசிரியர்களுக்கும் கண் கலங்கியது. இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    ஆசிரியை மாற்றப்பட்ட தகவல் அறிந்து பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களும் வந்தனர். தங்கள் பிள்ளைகள் தேம்பி தேம்பி அழுவதை கண்டு அவர்களுக்கும் கண்ணில் நீர் பெருக்கெடுத்தது.

    எங்கள் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் பள்ளிக்கு வர மாட்டோம் என அடம்பிடித்து வந்தனர். இந்த ஆசிரியை வந்த பிறகு ஆர்வமுடன் காலையிலேயே எழுந்து பள்ளிக்கு புறப்பட்டு வந்து விடுவார்கள்.

    கடந்த 17 வருடமாக எங்கள் பகுதியில் குழந்தைகளுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. தற்போது திடீரென ஆசிரியை மாற்றப்பட்டுள்ளார்.

    மற்றொரு பகுதியில் உள்ள குழந்தைகள் நலனுக்காக அவர் மாற்றப்படுவதாக கூறியுள்ளனர்.

    அப்படியானால் எங்கள் குழந்தைகளின் நிலைமை என்னவாகும். அதை நினைத்து பார்க்க வேண்டும். ஆசிரியை மாற்றப்பட்ட தகவல் அறிந்ததது முதல் வீட்டில் சரியாக சாப்பிடாமல் குழந்தைகள் அடிக்கடி அழுகின்றனர்.

    அவர்களை தேற்ற முடியாமல் நாங்கள் தவித்து வருகிறோம். இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர் ஓய்வு பெற இன்னும் ஒரு வருட காலம்தான் உள்ளது.

    அந்த ஒரு வருடமாவது இங்கேயே பணியாற்ற வாய்ப்பு தர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×