என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று ஏமாற்றி 8 பேரிடம் ரூ.1½ கோடி பணம் பறிப்பு -ஆப்பிரிக்க மோசடி கும்பல் துணிகரம்
    X

    இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று ஏமாற்றி 8 பேரிடம் ரூ.1½ கோடி பணம் பறிப்பு -ஆப்பிரிக்க மோசடி கும்பல் துணிகரம்

    • ஒரு லிட்டர் ஆயில் இந்தியாவில் ரூ.1 லட்சம் என்றும், நீங்கள் எத்தனை லிட்டர் வேண்டுமானாலும் வாங்கி கொடுக்கலாம் என்று மோசடி ஆசாமிகள் ஆசை வார்த்தைகளை அள்ளி வீசுவார்கள்.
    • புற்று நோய்க்கான எண்ணையின் பெயரை சொல்லி மோசடி கும்பல் கைவரிசை காட்டி இருக்கிறது.

    ஜிபே பண மோசடி போன்று இன்னொரு வகையான புதிய மோசடியும் கடந்த சில நாட்களாக அரங்கேற்றப்பட்டு வருகிறது.

    புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும் மரப்பட்டை ஆயில் எங்களுக்கு தேவைப்படுகிறது. நாங்கள் ஆப்பிரிக்க நாட்டில் இருந்து பேசுகிறோம் என்று மோசடி கும்பல் கைவரிசை காட்டி இருக்கிறது.

    நீங்கள் ரூ.2 லட்சத்துக்கு ஆயில் வாங்கி கொடுத்தால் உங்களுக்கு இரட்டிப்பு லாபமாக 4 லட்சம் ரூபாய் தருகிறோம் என்று கூறி மோசடி கும்பல் கைவரிசை காட்டத் தொடங்கி உள்ளது.

    இதற்கான பேச்சு வார்த்தைகளை ஆன்லைன் மூலமாகவே நடத்தி மும்பையை சேர்ந்த `ஆர்.கே.இண்டஸ்ட்ரி' என்ற நிறுவனத்தின் பெயரையும் மோசடி ஆசாமிகள் பயன்படுத்தி உள்ளனர். இந்த பெயரில் மும்பையில் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.

    ஆனால் அவர்களுக்கும் மோசடி ஆசாமிகளுக்கும் தொடர்பு இல்லை. ஒரு லிட்டர் ஆயில் இந்தியாவில் ரூ.1 லட்சம் என்றும், நீங்கள் எத்தனை லிட்டர் வேண்டுமானாலும் வாங்கி கொடுக்கலாம் என்று மோசடி ஆசாமிகள் ஆசை வார்த்தைகளை அள்ளி வீசுவார்கள்.

    நீங்கள் உடனடியாக 20 லிட்டர் மரப்பட்டை எண்ணையை வாங்குவதற்கு ரூ.20 லட்சம் பணம் கட்டினால் அடுத்த நொடியே உங்கள் வங்கி கணக்கில் ரூ.40 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று மோசடி ஆசாமிகள் கூறியதை கேட்டு 8 பேர் தலா ரூ.20 லட்சம் பணத்தை கட்டி உள்ளனர்.

    இதன் மூலம் மோசடி கும்பல் ரூ.1½ கோடியை பறித்துள்ளனர். இவர்கள் அனைவரும் திருப்பூரை சேர்ந்தவர்கள். பாதிக்கப்பட்ட நபர்கள் அங்கு சிறிய அளவில் தொழில் செய்து வருபவர் கள் என்றும், தாங்கள் சிறுக சிறுக சேமித்த பணத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.

    பேராசை காரணமாகவே 8 பேரும் தங்களது பணத்தை இழந்துள்ளனர் என்றும் ஆன்லைன் மோசடியில் ஈடுபடுபவர்கள் இப்படித் தான் ஆசை காட்டி மோசடி செய்து வருகிறார்கள் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

    Next Story
    ×