என் மலர்
விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இலங்கை-நியூசிலாந்து ஆட்டம் மழையால் பாதியில் ரத்து
- இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
- நடப்பு தொடரில் மழையால் ரத்தான 2-வது ஆட்டம் இதுவாகும்.
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த நிலையில் கொழும்பில் நேற்று நடந்த 15-வது லீக்கில் இலங்கை அணி, முன்னாள் சாம்பியனான நியூசிலாந்தை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 258 ரன்கள் சேர்த்தது. உலகக் கோப்பையில் இலங்கையின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். கேப்டன் சமாரி அட்டப்பட்டு (53 ரன்), நிலக்ஷிகா சில்வா (55 ரன், 28 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) அரைசதம் விளாசினர்.
ஆனால் இலங்கையின் இன்னிங்ஸ் முடிந்ததும் மழை புகுந்து விளையாடியது. தொடர்ந்து மழை பெய்ததால் அத்துடன் ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. நடப்பு தொடரில் மழையால் ரத்தான 2-வது ஆட்டம் இதுவாகும்.
ஏற்கனவே ஆஸ்திரேலியா- இலங்கை இடையிலான ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. இதே மைதானத்தில் இன்று நடக்கும் 16-வது லீக்கில் இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் (பிற்பகல் 3 மணி) மோதுகின்றன.






