search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்... பயிற்சியாளர்கள் மீது வினேஷ் போகத் பரபரப்பு குற்றச்சாட்டு
    X

    மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்... பயிற்சியாளர்கள் மீது வினேஷ் போகத் பரபரப்பு குற்றச்சாட்டு

    • பிரிஜ்பூஷன் சரண் சிங் மற்றும் பிற அதிகாரிகளுக்கு எதிராக 30 மல்யுத்த வீரர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அதிகாரிகளால் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்

    புதுடெல்லி:

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என இரண்டிலும் தங்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற பெருமை பெற்றவர் வினேஷ் போகத். இவர், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு மீதும், அதன் தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங் மற்றும் பயிற்சியாளர்கள் மீது கூறிய குற்றச்சாட்டுகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பிரிஜ்பூஷன் சரண் சிங் மற்றும் பிற அதிகாரிகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் வினேஷ் போகத், உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற சரிதா மோர், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை பஜ்ரங் புனியா உட்பட 30 மல்யுத்த வீரர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுமார் 4 மணி நேரம் நடந்த இப்பேராட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வினேஷ் போகத், தேசிய பயிற்சியாளர்களால் பல ஆண்டுகளாக மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகப் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு, அதன் தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங்கை பதவியிலிருந்து நீக்க வலியுறுத்திய வினேஷ் போகத், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அதிகாரிகளால் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்.

    'இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரால் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் அத்துமீறல் பற்றி குறைந்தது 10-12 மல்யுத்த வீராங்கனைகளை என்னிடம் கூறி உள்ளனர். அவர்களின் பெயர்களை என்னால் இப்போது கூற முடியாது. ஆனால், பிரதமர், உள்துறை மந்திரியை நாங்கள் சந்திக்க நேர்ந்தால் நிச்சயம் பெயர்களைச் சொல்வேன்' என்றார் வினேஷ் போகத்.

    பின்னர் பேசிய பஜ்ரங் புனியா, ``எங்கள் போராட்டம் அரசாங்கத்துக்கோ அல்லது இந்திய விளையாட்டு ஆணையத்துக்கோ எதிரானது அல்ல. இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிரானது இது. கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்து அவர் நீக்கப்படும்வரை இந்தப் போராட்டம் தொடரும்" என்று கூறினார்.

    வீராங்கனைகள் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மை அல்ல என பிரிஜ்பூஷன் சரண் சிங் பதில் அளித்துள்ளார். ``உங்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் இருந்தால், 10 ஆண்டுகளாக ஏன் யாருமே இதுபற்றி பேசவில்லை? விதிமுறைகள் வகுக்கப்படும்போதெல்லாம் இதுபோன்ற பிரச்னைகள் வருகின்றன. என் மீதான ஒரு பாலியல் துன்புறுத்தல் வழக்கு நிரூபிக்கப்பட்டாலும் நான் தூக்கில் தொங்க தயாராக இருக்கிறேன். நான் கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருந்து விலக மாட்டேன். ஆனால் சிபிஐ அல்லது போலீஸ் விசாரணைக்கு தயாராக இருக்கிறேன்" என பிரிஜ்பூஷன் சரண் சிங் தெரிவித்தார்.

    Next Story
    ×