என் மலர்
விளையாட்டு

உலக ராபிட் செஸ் போட்டி.. சாம்பியன் பட்டம் வென்ற கொனேரு ஹம்பிக்கு பிரதமர் மோடி பாராட்டு
- உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றார்.
- 2019 ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் நடைபெற்ற தொடரிலும் ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
அமெரிக்காவின் நியூ யார்க்கில் நடைபெற்ற உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். இறுதிப் போட்டியில் இந்தோனேசியாவை சேர்ந்த ஐரீன் சுகந்தரை எதிர்கொண்டு விளையாடிய கொனேரு ஹம்பி 11 புள்ளிகளில் 8.5 புள்ளிகளுடன் போட்டியை முடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் சீனாவின் ஜூ வென்ஜூனுக்கு பிறகு அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றவர்கள் பட்டியலில் கொனேரு ஹம்பி இரண்டாவது இடத்தில் உள்ளார். முன்னதாக 2019 ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் நடைபெற்ற தொடரிலும் ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றி பெற்ற இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "2வது முறையாக உலக ரேபிட் செஸ் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் கொனேரு ஹம்பி. இதன்மூலம் இப்படி ஒரு நம்பமுடியாத, மகத்தான சாதனையை நிகழ்த்திய ஒரே இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். உங்களின் புத்திசாலித்தனம் பலரையும் ஊக்குவிக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.






