என் மலர்
விளையாட்டு

IPL 2025: லக்னோ-மும்பை அணிகள் இன்று மோதல்
- மும்பையில் நடந்த கடந்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவை பந்தாடியது.
- வெற்றி உத்வேகத்தை தொடர மும்பை அணி தீவிரம் காட்டும்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோவில் நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை சந்திக்கிறது.
ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி தொடக்க ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியிடம் வீழ்ந்தது. அடுத்த ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை அடக்கியது. சொந்த மண்ணில் நடந்த முந்தைய ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் பணிந்தது. அந்த ஆட்டத்தில் லக்னோ நிர்ணயித்த 172 ரன் இலக்கை பஞ்சாப் அணி 16.2 ஓவரில் எளிதாக எட்டிப்பிடித்தது.
இந்த தோல்வியை தொடர்ந்து ஆடுகளத்தின் தன்மை குறித்து புகார் கிளம்பியது. 'இந்த ஆடுகளத்தை உருவாக்கிய ஊழியர்கள் இது லக்னோ அணியின் சொந்த மைதானம் என்பதை மறந்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். உள்ளூர் அணிக்கான அனுகூலமான சூழல் எதுவுமில்லை. பஞ்சாப் பிட்ச் பராமரிப்பாளர் ஆடுகளத்தை தயார் செய்தது போல் இருந்தது' என்று லக்னோ அணியின் ஆலோசகர் ஜாகீர்கான் கூறியிருந்தார். இதனால் இந்த ஆட்டத்துக்கு உள்ளூர் அணிக்கு கைகொடுக்கும் வகையிலான ஆடுகளம் அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
லக்னோ அணியில் பேட்டிங்கில் நிகோலஸ் பூரன் (189 ரன்), மிட்செல் மார்ஷ் (124) தவிர மற்றவர்கள் சோபிக்கவில்லை. குறிப்பாக ரூ.27 கோடிக்கு வாங்கப்பட்ட கேப்டன் ரிஷப் பண்ட் 0, 15, 2 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்து வருகிறார். அந்த அணி நல்ல ஸ்கோரை எட்ட அவர் நிலைத்து நின்று கணிசமான பங்களிப்பை அளிக்க வேண்டும். பந்து வீச்சில் ஷர்துல் தாக்குர், ரவி பிஷ்னோய், திக்வேஷ் ரதி நம்பிக்கை அளித்தாலும் இன்னும் ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் முதல் எந்த போட்டியிலும் ஆடாத வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் முழு உடல் தகுதியை எட்டியதால் லக்னோ அணியினருடன் இணைந்து இருக்கிறார். அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடுவார் என்று தெரிகிறது. அவரது வருகை அந்த அணியின் பந்து வீச்சுக்கு பலம் சேர்க்கும் என்று நம்பப்படுகிறது.
மும்பை அணி தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையிடமும், 36 ரன் வித்தியாசத்தில் குஜராத்திடமும் உதை வாங்கியது. மும்பையில் நடந்த கடந்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவை பந்தாடியது. அந்த ஆட்டத்தில் கொல்கத்தாவை 116 ரன்னில் சுருட்டிய மும்பை அணி 12.5 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்து முதல் வெற்றியை பதிவு செய்தது.
முந்தைய ஆட்டத்தில் மும்பை அணியில் பேட்டிங்கில் ரிக்கெல்டன் (62 ரன்), சூர்யகுமார் (27 ரன்) கடைசி வரை களத்தில் நின்று அசத்தினர். தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தொடர்ந்து சொதப்பி வருகிறார். கடந்த 3 ஆட்டங்களில் 0, 8, 13 என்று சொற்ப ரன்களில் வெளியேறிய அவர் பார்முக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார். பந்து வீச்சில் இடக்கை வேகப்பந்து வீச்சாளரான பஞ்சாப்பை சேர்ந்த 23 வயது அஷ்வனி குமார் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அனைவரது கவனத்தை ஈர்த்ததுடன் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். பும்ரா இல்லாத குறையை போக்கும் வகையில் அவர் தொடர்ந்து ஜொலிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், விக்னேஷ் புத்தூர், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் பந்து வீச்சில் வலு சேர்க்கிறார்கள்.
வெற்றி உத்வேகத்தை தொடர மும்பை அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் கடந்த தோல்வியில் இருந்து மீண்டு உள்ளூரில் முதல் வெற்றியை ருசிக்க லக்னோ அணி எல்லா வகையிலும் முயலும். இரு அணிகளும் இரண்டாவது வெற்றிக்கு குறிவைக்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 5 ஆட்டங்களில் லக்னோவும், ஒன்றில் மட்டும் மும்பையும் வெற்றி பெற்றுள்ளன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
லக்னோ: மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்குர், திக்வேஷ் ரதி, ஆகாஷ் தீப், ரவி பிஷ்னோய்,
மும்பை: ரோகித் சர்மா, ரையான் ரிக்கெல்டன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், அஷ்வனி குமார், விக்னேஷ் புத்தூர் அல்லது முஜீப் ரகுமான்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.






