என் மலர்tooltip icon

    விளையாட்டு

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்திய அணி இன்று அறிவிப்பு
    X

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்திய அணி இன்று அறிவிப்பு

    • கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி எந்த ஒரு 20 ஓவர் தொடரையும் இழந்ததில்லை.
    • ஆசிய கோப்பை உள்பட தொடர்ச்சியாக 8 தொடர்களை கைப்பற்றி இருக்கிறது.

    10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியாவுடன், பாகிஸ்தான், நமிபியா, நெதர்லாந்து, அமெரிக்க அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் பிப்.7-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதுகிறது. பரம போட்டியாளரான பாகிஸ்தானை பிப்.15-ந்தேதி கொழும்பில் சந்திக்கிறது.

    இந்த நிலையில் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி மும்பையில் இன்று அறிவிக்கப்படுகிறது. இதையொட்டி தேர்வு குழு தலைவர் அஜீத் அகர்கர் தலைமையிலான கமிட்டியினர் ஆலோசிக்கிறார்கள். தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் சூர்யகுமார் யாதவும் அணித் தேர்வில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி எந்த ஒரு 20 ஓவர் தொடரையும் இழந்ததில்லை. ஆசிய கோப்பை உள்பட தொடர்ச்சியாக 8 தொடர்களை கைப்பற்றி இருக்கிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் கணிசமான வெற்றிகளோடு 'நம்பர் ஒன்' அணியாக திகழ்கிறது. அதனால் தற்போதைய 20 ஓவர் அணியில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் மாற்றங்கள் இருக்கப்போவதில்லை. பார்மின்றி தடுமாறும் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்லுக்கு இடம் இருக்குமா? என்பது தான் சற்று கேள்விக்குறியாக இருக்கிறது. அவரது இடத்துக்கு ஜெய்ஸ்வால் அல்லது சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் 45 பந்தில் சதம் விளாசிய இஷான் கிஷன் ஆகியோரின் பெயர் பரிசீலிக்கப்படலாம். மற்றபடி அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, கேப்டன் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஜிதேஷ் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப்சிங், அக்ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா ஆகியோர் அணியில் தொடருவார்கள்.

    ரிங்கு சிங், ரியான் பராக், நிதிஷ்குமார் ரெட்டி, பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோர் மாற்று வீரர்களின் பட்டியலில் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது. உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்பு வரை அணியில் மாற்றம் செய்து கொள்ள முடியும்.

    முன்னதாக நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஜன.11-ந்தேதி வதோதராவில் நடக்கிறது. இதற்கான இந்திய அணியும் இன்று அறிவிக்கப்படுகிறது.

    Next Story
    ×