என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மகளிர் உலகக் கோப்பை: இலங்கையை அலறவிட்ட இந்தியா - முதல் போட்டியில் வென்று அசத்தல்
- தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 8 ரன்னில் அவுட்டானார்.
- இந்திய மகளிர் அணி 47 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்தது.
13-வது மகளிர் உலகக் கோப்பை போட்டியை ஆசிய நாடுகளான இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. இந்த கிரிக்கெட் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி நவ.2-ந்தேதி வரை கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம், நவிமும்பை மற்றும் இலங்கையின் கொழும்பு ஆகிய நகரங்களில் நடக்கிறது.
இந்நிலையில், மகளிர் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் கவுகாத்தியில் நேற்று மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய மகளிர் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 8 ரன்னில் அவுட்டானார்.
2வது விக்கெட்டுக்கு பிரதிகா ராவல், ஹர்லின் தியோல் ஜோடி 67 ரன்கள் சேர்த்த நிலையில் பிரதிகா ராவல் 37 ரன்னில் வெளியேறினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹர்லின் தியோல் 48 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதன்பின், பெய்த மழை காரணமாக போட்டி 47 ஓவராக குறைக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகள் விரைவில் அவுட்டாகினர். 124 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தத்தளித்தது.
7வது விக்கெட்டுக்கு இணைந்த தீப்தி ஷர்மா, அமன்ஜோத் கவுர் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தது. இருவரும் அரை சதம் கடந்தனர். 83 ரன்கள் சேர்த்த நிலையில் அமன்ஜோத் கவுர் 57 ரன்னில் வெளியேறினார். தீப்தி சர்மா 53 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கடைசி கட்டத்தில் ஸ்ரே ரானா அதிரடியாக ஆடி 15 பந்தில் 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 28 ரன்கள் குவித்தார்.
இறுதியில், இந்திய மகளிர் அணி 47 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணி சார்பில் இனோகா ரணவீரா 4 விக்கெட்டும், பிரபோதினி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து 270 என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆனால் இந்தியப் பந்துவீச்சாளர்கள் அபாரமாகச் செயல்பட்டதால் இலங்கை அணி திணறியது.
தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளையும், ஸ்னே ராணா மற்றும் சரணி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இலங்கை அணியை 211 ரன்களுக்கு சுருட்டினர். இதன்மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.






