என் மலர்
கிரிக்கெட் (Cricket)

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: ஹாட்ஜ் சதத்தால் 3-ம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 381 ரன்கள் குவிப்பு
- வெஸ்ட் இண்டீஸ் வீரர் கவேம் ஹாட்ஜ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார்.
- நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி, அஜாஸ் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
மவுண்ட் மாங்கானு:
நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கானுவில் நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 575 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர்களான கான்வே இரட்டை சதமும் (227 ரன்), கேப்டன் டாம் லாதம் சதமும் (137) அடித்தனர். ரச்சின் ரவீந்திரா 72 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் ஷீல்ஸ் , ஆண்டர்சன் பிலிப், ஜஸ்டின் கிரீவ்ஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 110 ரன் எடுத்து இருந்தது. பிரன்டன் கிங் 55 ரன்னுடனும், கேம்பெல் 45 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. 465 ரன்கள் பின்தங்கி, கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் வெஸ்ட்இண்டீஸ் தொடர்ந்து விளையாடியது.
கேம்பெல் மேலும் ரன் எதுவும் எடுக்காமலும், பிரன்டன் கிங் 63 ரன்னிலும், டெவின் இம்லாச் 26 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அதை தொடர்ந்து அலிக் அதானேஸ் (44 ரன்), ஜஸ்டின் கிரீவ்ஸ் (43 ரன்), கேப்டன் ரோஸ்டன் சேஸ் (2) ஆகியோர் அவுட் ஆனார்கள்.
மறுமுனையில் இருந்த 3-வது வரிசை வீரரான கவேம் ஹாட்ஜ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் அவர் பொறுப்புடன் ஆடினார். 224 பந்துகளில் 13 பவுண்டரியுடன் 100 ரன்களை தொட்டார். 13-வது டெஸ்டில் விளையாடும் கவேம் ஹாட்ஜ்க்கு இது 2-வது சதமாகும்.
இதனால் 3-வது நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 381 ரன்கள் எடுத்துள்ளது. ஹாட்ஜ் 109 ரன்னுடனும் பில்ப் 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி, அஜாஸ் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.






