என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    விஜய் ஹசாரே கோப்பை: ஒருநாளில் நடந்த சாதனை துளிகள்
    X

    விஜய் ஹசாரே கோப்பை: ஒருநாளில் நடந்த சாதனை துளிகள்

    • அருணாசலபிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பீகார் பேட்ஸ்மேன்கள் மொத்தம் 38 சிக்சர்களை பறக்க விட்டனர்.
    • விஜய் ஹசாரே கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்சில் சதம் அடித்த 3 வீரர்களை கொண்ட அணி என்ற பெருமையை பீகார் பெற்றது.

    இந்திய உள்ளூர் ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 33-வது சீசன் நேற்று முதல் ஜனவரி 18-ந் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தொடங்கியது. இந்த போட்டியில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று நடந்த பல்வேறு போட்டிகளில் பல சாதனைகள் அரங்கேறியுள்ளது.

    •அதன்படி அருணாசலபிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பீகார் பேட்ஸ்மேன்கள் மொத்தம் 38 சிக்சர்களை பறக்க விட்டனர். ஆண்கள் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் நொறுக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கை இது தான். இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த மலேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கனடா 28 சிக்சர் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.

    •பீகார் அணியில் சூர்யவன்ஷி, ஆயுஷ் லோஹருகா, கானி ஆகியோர் செஞ்சுரி போட்டனர். விஜய் ஹசாரே கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்சில் சதம் அடித்த 3 வீரர்களை கொண்ட அணி என்ற பெருமையை பீகார் பெற்றது.

    •சீனியர் பிரிவில் சூர்யவன்ஷி இதுவரை 4 சதங்கள் அடித்துள்ளார். இவற்றில் 3 சதம் 20 ஓவர் போட்டியில் வந்தவை. 15 வயதுக்கு முன்பாக லிஸ்ட் ஏ மற்றும் 20 ஓவர் போட்டியில் சதத்தை ருசித்த ஒரே வீரர் சூர்யவன்ஷி தான்.

    •அருணாசலபிரதேச வேகப்பந்து வீச்சாளர் மிபோம் மோசு 9 ஓவர்களில் 116 ரன்களை வாரி வழங்கினார். அவர் 'லிஸ்ட் ஏ'-ல் அதிக ரன்களை அள்ளிகொடுத்த மோசமான பந்து வீச்சாளர் பட்டியலில் இணைந்தார். 2023-ம்ஆண்டு உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நெதர்லாந்தின் பேஸ் டி லீட் 115 ரன்களை வழங்கியதே முந்தைய மோசமான பந்து வீச்சாக இருந்தது

    விஜய் ஹசாரே கிரிக்கெட்டில் பீகார் வீரர்கள் சூர்யவன்ஷி 36 பந்திலும், சகிபுல் கானி 32 பந்திலும் சதம் விளாசிய நிலையில் அதற்கு சற்று முன்பாக ஜார்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷன் 33 பந்தில் சதம் அடித்தார். ஆனால் அவரது சதத்துக்கு பலன் இல்லை.

    அமதாபாத்தில் நடந்த கர்நாடகாவுக்கு எதிரான ஆட்டத்தில் ('ஏ' பிரிவு) முதலில் பேட் செய்த ஜார்கண்ட் 9 விக்கெட்டுக்கு 412 ரன்கள் குவித்தது. 33 பந்தில் சதத்தை எட்டிய இஷான் கிஷன் 125 ரன்களில் (39 பந்து, 7 பவுண்டரி, 14 சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய கர்நாடகா 47.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 413 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விஜய் ஹசாரேயில் ஒரு அணி விரட்டிப்பிடித்த (சேசிங்) அதிகபட்ச இலக்கு இதுவாகும். தேவ்தத் படிக்கல் 147 ரன்கள் (118 பந்து, 10 பவுண்டரி, 7 சிக்சர்) திரட்டினார்.

    விஜய் ஹசாரே தொடரில் நேற்று ஒரே நாளில் 22 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×