என் மலர்
கிரிக்கெட் (Cricket)

U19 உலகக் கோப்பை: சூப்பர் 6 சுற்றில் இந்தியா- ஜிம்பாப்வே இன்று மோதல்
- மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் சந்திக்கின்றன.
- ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் இந்தியா விளையாட இருக்கிறது.
ஹசாரே:
16-வது இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-3 அணிகள் வீதம் மொத்தம் 12 அணிகள் சூப்பர்6 சுற்றுக்கு தகுதி பெற்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் குரூப்2-ல் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி ஏற்கனவே லீக் சுற்றில் நியூசிலாந்து, வங்காளதேசத்தை வீழ்த்தி இருப்பதால் அந்த வெற்றிக்குரிய புள்ளி சூப்பர்6 சுற்றில் கணக்கில் கொள்ளப்படும். அவற்றுடன் இனி மோத வேண்டியதில்லை.
போட்டி விதிப்படி சூப்பர் 6 சுற்றில் இந்திய அணி, இன்னொரு பிரிவில் இருந்து வந்த 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்த அணிகளுடன் மட்டுமே மோத வேண்டும். இதன்படி ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் இந்தியா விளையாட இருக்கிறது.
ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி சூப்பர்6 சுற்றில் இன்று போட்டியை நடத்தும் ஜிம்பாப்வேயை (பிற்பகல் 1 மணி) புலவாயோவில் எதிர்கொள்கிறது. லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி இந்த ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் சந்திக்கின்றன.
இதற்கிடையே நேற்று நடந்த ஆட்டங்களில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தையும், இலங்கை 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும் (குரூப்1) தோற்கடித்தது.






