என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சேசிங்கில் அதிவேக சதம்: வரலாற்று சாதனை படைத்த டிராவிஸ் ஹெட்
- 205 ரன்களை இலக்காகக் கொண்டு ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.
- தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடி வெற்றியை தேடிக்கொடுத்தார்.
பெர்த்:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 32.5 ஓவரில் 172 ரன்னில் ஆல் அவுட்டானது. ஹாரி புரூக் 52 ரன்கள் அடித்தார்.
ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை அள்ளினார்.
தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 132 ரன்களில் ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.
40 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 34.4 ஓவரில் 164 ரன்களில் ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளும், ஸ்டார்க் மற்றும் பிரெண்டன் டாகெட் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
205 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடி வெற்றியை தேடிக்கொடுத்தார்.
இரண்டாவது இன்னிங்சில் 28. 2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட் 69 பந்துகளில் சதமடித்து 123 ரன்கள் குவித்தார்.
இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 4வது இன்னிங்சில் சேசிங்கின்போது அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை டிராவிஸ் ஹெட் படைத்துள்ளார்.






