என் மலர்
கிரிக்கெட் (Cricket)

TNPL குவாலிபையர் 1: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருப்பூர் தமிழன்ஸ் இன்று பலப்பரீட்சை
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, லீக் சுற்றில் அனைத்து அணிகளையும் துவம்சம் செய்தது.
- திருப்பூர் அணி அதன் பிறகு கடைசி 4 ஆட்டங்களில் வரிசையாக வெற்றி பெற்று எழுச்சி பெற்றது.
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (14 புள்ளி), திருப்பூர் தமிழன்ஸ் (10 புள்ளி), நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் (8 புள்ளி), திருச்சி கிராண்ட் சோழாஸ் (6 புள்ளி) ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) நுழைந்தன. சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய அணிகள் வெளியேறின.
இந்த நிலையில் இன்றிரவு அரங்கேறும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை பிடித்த அணிகளான சேப்பாக் சூப்பர் கில்லீசும், திருப்பூர் தமிழன்சும் கோதாவில் இறங்குகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோற்கும் அணிக்கு இறுதிசுற்றை எட்ட இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்.
கலக்கும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்:
4 முறை சாம்பியனான பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, லீக் சுற்றில் அனைத்து அணிகளையும் துவம்சம் செய்தது. நெருக்கமாக அமைந்த சில ஆட்டங்களில் கூட கடைசி கட்டத்தில் அட்டகாசமாக பந்து வீசி வெற்றிக்கனியை பறித்தது. பாபா அபராஜித் (3 அரைசதம் உள்பட 315 ரன்), ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் (237 ரன் மற்றும் 8 விக்கெட்), ஆஷிக் (186 ரன்) ஆகியோர் பேட்டிங்கிலும், அபிஷேக் தன்வர் (13 விக்கெட்), பிரேம்குமார் (9 விக்கெட்), சிக்கனத்தை காட்டும் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் எம்.சிலம்பரசன் (ஓவருக்கு சராசரி 5.62 ரன் வழங்கி 8 விக்கெட் எடுத்துள்ளார்) உள்ளிட்டோர் பந்து வீச்சிலும் மிரட்டுகிறார்கள்.
ஏற்கனவே திருப்பூர் தமிழன்சுக்கு எதிரான லீக்கில் 174 ரன் இலக்கை 16 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து அசத்திய கில்லீஸ் அணி மிகுந்த நம்பிக்கையுடன் களம் காணும். வெற்றிப்பயணத்தை நீட்டித்து 6-வது முறையாக இறுதிப்போட்டியை எட்டும் ஆர்வத்துடன் தயாராகி வருகிறது.
திருப்பூர் எப்படி?
முதல் 3 ஆட்டங்களில் 2-ல் சறுக்கிய திருப்பூர் அணி அதன் பிறகு கடைசி 4 ஆட்டங்களில் வரிசையாக வெற்றி பெற்று எழுச்சி பெற்றதுடன், புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை உறுதி செய்தது. ஆரஞ்சு நிற தொப்பியை தக்கவைத்திருக்கும் தொடக்க ஆட்டக்காரர் துஷர் ரஹேஜா (4 அரைசதம், 25 சிக்சருடன் 383 ரன்), அமித் சாத்விக் (218 ரன்), கேப்டன் சாய் கிஷோர் (95 ரன் மற்றும் 10 விக்கெட்), புதிய நட்சத்திரமாக உருவெடுக்கும் வேகப்பந்து வீச்சாளர் இசக்கி முத்து (9 விக்கெட்), சர்வதேச அனுபவம் கொண்ட வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் (9 விக்கெட்), ஆகியோர் தான் அந்த அணியின் முதுகெலும்பாக இருக்கிறார்கள். அவர்கள் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதிக்கும் வேட்கையுடன் வரிந்து கட்டுவதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
இவ்விரு அணிகள் இதுவரை 9 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 7-ல் கில்லீசும், ஒன்றில் திருப்பூரும் வெற்றி கண்டுள்ளன. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை.
இன்று இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.






