என் மலர்
கிரிக்கெட் (Cricket)

முத்தரப்பு தொடர்: பதும் நிசங்கா அதிரடியில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது இலங்கை
- முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 20 ஓவரில் 146 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இலங்கை 148 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
ராவல்பிண்டி:
பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே, இலங்கை அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்தது.கேப்டன் சிக்கந்தர் ராசா 37 ரன்னில் அவுட்டானார். பிரியன் பென்னட் 34 ரன்னில் வெளியேறினார். ரியான் பர்ல் 26 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இலங்கை சார்பில் மகேஷ் தீக்சனா, வஹிந்து ஹசரங்கா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்க அதிரடியாக ஆடி அரை சதமடித்தார்.
அவருக்கு குசால் மெண்டிஸ் நன்கு ஒத்துழைப்பு அளித்தார்.
இறுதியில், இலங்கை அணி 16.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பதும் நிசங்கா 98 ரன்னும், குசால் மெண்டிஸ் 25 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இலங்கை அணி தான் ஆடிய 3 லீக் போட்டிகளில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
அடுத்து நடைபெறவுள்ள பாகிஸ்தானுடனான போட்டியில் இலங்கை அணி கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும். இல்லையேல் தனது ரன் ரேட்டை உயர்த்த வேண்டும் . இல்லையெனில் ரன்ரேட் அடிப்படையில் இறுதிப்போட்டிக்கு ஜிம்பாப்வே அணி நுழைந்துவிடும்.






