என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இலங்கைக்கு பயம் காட்டிய ஜிம்பாப்வே: முதல் ஒருநாள் போட்டியில் 7 ரன்னில் நழுவிய வெற்றி
- முதலில் பேட் செய்த இலங்கை அணி 298 ரன்களைக் குவித்தது.
- பதும் நிசங்கா, கமிந்து மெண்டிஸ் அரை சதம் கடந்து வெளியேறினர்.
ஹராரே:
இலங்கை அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹராரேயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 6 விக்கெட்டுக்கு 298 ரன்களைக் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 76 ரன்னில் அவுட்டானார். கமிந்து மெண்டிஸ் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 57 ரன்னில் வெளியேறினார்.
இதையடுத்து, 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பென் கர்ரன் சிறப்பாக ஆடி 70 ரன்கள் எடுத்தார்.
பொறுப்புடன் ஆடிய சிக்கந்தர் ராசா அரை சதம் கடந்தார். அணியை வெற்றி பெறவைக்கப் போராடிய அவர் 92 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், ஜிம்பாப்வே அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 291 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
சிக்கந்தர் ராசா அவுட்டாகும்வரை இலங்கை அணிக்கு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையே இல்லை.
இலங்கை அணி சார்பில் தில்ஷன் மதுஷனகா 4 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் ஒருநாள் தொடரில் இலங்கை 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.






