என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இந்திய அணிக்காக எதுவென்றாலும் செய்ய தயார்- பேட்டிங் ஆர்டர் குறித்த கேள்விக்கு சாம்சன் பதில்
- சஞ்சு சாம்சனுக்கு இந்த ஆண்டுக்கான CEAT சிறந்த டி20 பேட்டர் விருது வழங்கப்பட்டது
- அணிக்கு தேவை என்றால் 9-வது இடத்தில் பேட்டிங் செய்யவும் தயார்.
இந்தியாவின் பிரபல டயர் உற்பத்தி நிறுவனமான சிஏட் நிறுவனத்தால் சிஏட் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025 CEAT கிரிக்கெட் விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் சஞ்சு சாம்சனுக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த டி20 பேட்டர் விருது வழங்கப்பட்டது.
அப்போது அவரிடம் ஆசிய கோப்பை தொடரில் அவரது பேட்டிங் ஆர்டர் குறித்து கேள்வி எழுப்பபட்டது. அதற்கு சாம்சன் கூறியதாவது:-
இந்திய அணிக்காக நான் எதுவென்றாலும் செய்ய தயார். இந்திய ஜெர்சியை அணிந்து அந்த டிரஸ்ஸிங் அறையில் தங்க நான் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறேன். என் நாட்டிற்காக என் வேலையைச் செய்வதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
அணிக்கு தேவை என்றால் 9-வது இடத்தில் பேட்டிங் செய்யவும், இடது கை சுழற்பந்து வீச்சாளரை போல் பவுலிங் செய்யவும் கூட செய்வேன். நாட்டுக்காக எந்த வேலையாக இருந்தாலும், எனக்கு அது கவலையில்லை.
சமீபத்தில் நான் சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்தேன். ஆனால் அதில் மொத்தமாக 40 போட்டிகளில் மட்டுமே விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. எண்கள் என்ன கூறுகிறது என்பதை விட நான் தற்போது இருக்கும் நிலையை எண்ணி பெருமைப்படுகிறேன். மேலும் நான் கடந்து வந்த சவால்களை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.
இவ்வாறு சாம்சன் கூறினார்.






