என் மலர்
கிரிக்கெட் (Cricket)

அந்த மனசு தான் சார் கடவுள்.. கொச்சி அணிக்கு தனது சம்பளத்தை மொத்தமாக வழங்கிய சஞ்சு சாம்சன்
- கேரளா பிரீமியர் லீக் தொடரில் கொச்சி அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
- கேப்டனாக சாம்பியன் பட்டம் வென்ற தம்முடைய தம்பிக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கேரள பிரீமியர் லீக் டி20 2025 தொடர் நடைபெற்றது. அந்தத் தொடரில் கொச்சி அணிக்காக 26.80 லட்சம் என்ற பெரிய தொகைக்கு சஞ்சு சாம்சன் வாங்கப்பட்டார். அந்த அணிக்காக ஓப்பனிங்கில் களமிறங்கி மிரட்டலாக விளையாடிய அவர் 5 போட்டிகளில் ஒரு சதம் உட்பட 368 ரன்கள் குவித்து அசத்தினார்.
இருப்பினும் ஆசியக் கோப்பையில் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்பட்ட அவர் பிளே ஆப் சுற்றுக்கு முன்பாக கொச்சி அணியிலிருந்து வெளியேறினார். மறுபுறம் சஞ்சு சாம்சன் தம்பி ஷாலி சாம்சன் தலைமையில் தொடர்ந்து அசத்திய கொச்சி அணி 2025 கேரளா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
இந்நிலையில் கோப்பையை வென்ற தங்களுடைய கொச்சி அணிக்கு சாம்சன் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் கேப்டனாக சாம்பியன் பட்டம் வென்ற தம்முடைய தம்பிக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏலத்தில் தமக்கு கொடுக்கப்பட்ட சம்பளத் தொகையை கொச்சி அணியின் சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு பரிசாக வழங்குவதாகவும் சாம்சன் அறிவித்துள்ளார்.
எனவே தம்முடைய மாநிலத்தில் நடைபெறும் தொடரின் சம்பளத்தை அவர் சக வீரர்களுக்கு சிறிய ஊக்கத்தொகைப் பரிசாக வழங்கியுள்ளார். அவருடைய இந்த செயலுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டு வருகின்றனர். அவருக்கு 2025 ஆசியக் கோப்பையில் இந்திய அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் வாழ்த்துகிறார்கள்.






