என் மலர்
கிரிக்கெட் (Cricket)

அடுத்தடுத்து டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு: ரவி சாஸ்திரி நம்பிக்கை
- வீரர்களின் தனிப்பட்ட திறமை, தற்போதைய ஃபார்ம்.
- சமீப காலங்களில் அவர்கள் விளையாடிய கிரிக்கெட் போட்டிகள் சாதகமாக உள்ளன.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய டி20 அணி கடந்த 2024-ம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றியது. அதன்பின் தற்போது வருகிற 7-ந்தேதி இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது.
இந்த உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்தியா நியூசிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 4-வது போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. 5-வது மற்றும் கடைசி போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடக்கிறது.
சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி டி20 தொடரில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பேட்டிங்கில் அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா என அனைவரும் ஃபார்மில் உள்ளனர். சஞ்சு சாம்சன் மட்டும் என்று தனது ஃபார்மை நிரூபிக்கவில்லை. பந்து வீச்சில் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், அக்சர் படேல் என சிறந்து பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் அடுத்தடுத்து உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கு உள்ளதாக ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரவி சாஸ்திரி கூறுகையில் "வீரர்களின் தனிப்பட்ட திறமை, தற்போதைய ஃபார்ம், போட்டிக்கான பிட்னஸ், சமீப காலங்களில் அவர்கள் விளையாடிய கிரிக்கெட் போட்டிகளின் அளவு ஆகியவை அவர்களைத் தெளிவான வெற்றி வாய்ப்புள்ள அணியாக ஆக்குகின்றன. குறிப்பாக, அவர்களின் முன்னணி பேட்டிங் வரிசையையும் அவர்கள் இருக்கும் சிறப்பான ஆட்ட நிலையையும் பார்க்கும்போது இது உறுதியாகிறது" எனத் தெரிவித்துள்ளார்.






