என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    4-வது நாள் உணவு இடைவேளை: 508 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் தென்ஆப்பிரிக்கா
    X

    4-வது நாள் உணவு இடைவேளை: 508 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் தென்ஆப்பிரிக்கா

    • ஸ்டப்ஸ் அரை சதம் அடித்து அசத்தினார்
    • தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 220 ரன்கள் எடுத்துள்ளது.

    கவுகாத்தி:

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.

    தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 489 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 201 ரன்னில் சுருண்டு பாலோ ஆன் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால் தென் ஆப்பிரிக்கா பாலோ ஆன் கொடுக்கவில்லை.

    ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 58 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 48 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினார்கள். மார்கோ யான்சென் 6 விக்கெட்டும், ஹார்மர் 3 விக்கெட்டும், கேசவ் மகராஜ் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    288 ரன்கள் முன்னிலையில் தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை விளையாடியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 26 ரன் எடுத்து இருந்தது. ரிக்கெல்டன் 13 ரன்னுடனும், மர்க்கிராம் 12 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் காலை 9 மணிக்கு தொடங்கியது. 314 ரன்கள் முன்னிலை, கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா தொடர்ந்து ஆடியது.

    ரிக்கெல்டன் 35 ரன்னிலும், மர்க்கிராம் 29 ரன்னிலும் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த கேப்டன் பவுமா 3 ரன்னில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் வெளியேறினார். 77 ரன்னில் தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட்டை இழந்தது.

    4-வது விக்கெட்டான ஸ்டப்ஸ்-சோர்சி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் சோர்சி 49 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து ஸ்டப்ஸ் உடன் முல்டர் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய ஸ்டப்ஸ் அரை சதம் அடித்து அசத்தினார்.

    இதனால் 4-ம் நாள் உணவு இடைவேளை வரை தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 220 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 515 ரன்கள் முன்னிலை பெற்று இந்த டெஸ்டில் மிகவும் வலுவான நிலையில் இருக்கிறது.

    முதல் டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இந்த டெஸ்டிலும் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. போட்டி டிராவில் முடிந்தாலும் தென்ஆப்பிரிக்கா தொடரை கைப்பற்றிவிடும்.

    Next Story
    ×