என் மலர்
கிரிக்கெட் (Cricket)

நிர்வாண சவால்: ஹைடன் மகளின் இன்ஸ்டா பதிவு வைரல்
- ஜோ ரூட் சதம் அடிக்கவில்லை என்றால் நிர்வாணமாக வருவேன் என மேத்யூ ஹைடன் கூறியிருந்தார்.
- நீங்கள் சதம் அடிக்கவில்லையெனில், என்னைத் தவிர வேறு யாருக்கும் அதிக ஆபத்து இல்லை என ஹைடன் கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 325 ரன் எடுத்தது. ஜோரூட் 135 ரன்னுடனும், ஜோப்ரா ஆர்ச்சர் 32 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சதத்தை ஜோ ரூட் பதிவு செய்தார்.
ஆஷஸ் தொடருக்கு முன்னதாக ஜோ ரூட் சதம் அடிப்பார் என்றும் அவர் சதம் அடிக்கவில்லை என்றால் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை நிர்வாணமாக சுற்றி வருவேன் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியிருந்தார்.
அந்த பதிவுக்கு ஹைடனின் மகள் கிரேஸ் ஹைடன், "தயவு செய்து இந்த முறை சதம் அடித்து விடுங்கள் ஜோ ரூட்" என்று இன்ஸ்டாகிராம் கமெண்டில் பதிவிட்டிருந்தார். இவர்களது இருவரின் பதிவும் இணையத்தில் வைரலாகியது.
இந்நிலையில் சதம் அடித்து மானத்தை காப்பாற்றிய ரூட்-க்கு ஹைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், "வாழ்த்துக்கள். ஆஸ்திரேலியாவில் நீங்கள் சதம் அடித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. சதம் அடிக்க நீண்ட நேரம் பிடித்துவிட்டது. நீங்கள் சதம் அடிக்கவில்லையெனில், என்னைத் தவிர வேறு யாருக்கும் அதிக ஆபத்து இல்லை. அதனால், மீண்டும் வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார்.
அதற்கு ஹேடனின் மகள், நன்றி ஜோ ரூட் "எங்கள் கண்கள் தப்பித்தது" என தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.







