என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐ.பி.எல் 2025 இறுதிப் போட்டி - பஞ்சாபை வீழ்த்தி கோப்பையை வென்ற ஆர்.சி.பி
- 18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
- இறுதியில் ஆர்சிபி அணி 20 ஓவரில் 190 ரன்கள் எடுத்தது.
18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி- சால்ட் களமிறங்கினர். விராட் கோலி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சால்ட் அதிரடியாக விளையாடி 9 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த மயங்க் அகர்வால் 24, பட்டிதார் 26 என ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடி வந்த விராட், அதிரடியாக விளையாட ஆரமித்தார். ஆனால் அதற்குள் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 35 பந்தில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து லிவிங்ஸ்டன் - ஜித்தேஷ் சர்மா ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 2 சிக்சர்கள் விளாசிய லிவிங்ஸ்டன் 25 ரன்னிலும் 2 பவுண்டரி 2 சிக்சர் விளாசிய ஜித்தேஷ் 10 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் ஆர்சிபி அணி 20 ஓவரில் 190 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து 191 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி திறமையுடன் விளையாடியது. பஞ்சாபின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியன்ஷ் ஆர்யா களம் இறங்கினர்.
இதில் பிரியன்ஷ் ஆர்யா 24 ரன்னிலும், பிரப்சிம்ரன் சிங் 26 ரன்னிலும் அவுட் ஆனார்கள். தொடர்ந்து களத்திற்கு வந்த இங்கிலிஸ் அதிரடியாக ஆடினார். அவர் 39 ரன்னிலும், அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னிலும் அவுட் ஆகினர்.
தொடர்ந்து இளம் வீரர்களான நேஹல் வதேரா மற்றும் ஷஷாங் சிங் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் வதேரா 15 ரன்னிலும், அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் 6 ரன்னிலும், ஓமர்சாய் 1 ரன்னிலும் அவுட் ஆகினர்.
20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை மட்டுமே பஞ்சாப் கிங்ஸ் அணியால் எடுக்க முடிந்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று தொடரை கைப்பற்றி உள்ளது. இந்த வெற்றியின் மூலம் அவ்வணியின் நீண்ட கால ஏக்கம் தீர்ந்துள்ளது.






