என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

நோட்டுப் புத்தக கொண்டாட்டத்தின் காரணத்தை தெரிவித்த திக்வேஷ் ரதி
- திக்வேஷ் ரதிக்கு பலமுறை அபராதம் விதிக்கப்பட்டது.
- இதன் காரணமாக இவர் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
லக்னோ:
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் பேட்டிங், மற்றும் பந்து வீச்சு மூலம் மற்றும் ஆக்ரோஷமான கொண்டாட்டத்தின் மூலம் பிரபலமாகினர். அந்த வகையில் லக்னோ அணியில் இடம் பிடித்த சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதி, நோட்புக் கொண்டாட்டத்தின் மூலம் பிரபலமானார்.
தொடர்ந்து அந்த கொண்டாட்டத்தினால் பலமுறை அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கடைசியாக ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா விக்கெட் எடுத்து அதே கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். மேலும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். பின்னர் நடுவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர்.
இந்த சம்பவம் குறித்து திக்வேஷ் ரதிக்கு 2 தகுதி இழப்பு புள்ளிகள் ஐ.பி.எல். நிர்வாகம் வழங்கியது. இவர் ஏற்கனவே நடப்பு தொடரில் இரண்டு முறை விதிமுறைகளை மீறியதற்காக 3 தகுதி இழப்பு புள்ளிகள் பெற்றுள்ளார். இதனையும் சேர்த்து மொத்தம் 5 தகுதி இழப்பு புள்ளிகள் பெற்றுள்ளார்.
இதன் காரணமாக இவர் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குஜராத் டைட்டன்சுக்கு எதிரான அடுத்த போட்டியில் அவர் விளையாட முடியாமல் போனது.
இந்நிலையில் திக்வேஷ் ரதியின் நோட்புக் கொண்டாட்டத்திற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். அதில், போட்டி நடக்கும் போதெல்லாம், நான் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துச் சென்று எல்லா பெயர்களையும் எழுதுவேன் என்று ரதி தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






