என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

2வது போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது வங்கதேசம்: சமனில் முடிந்த டெஸ்ட் தொடர்
- வங்கதேசம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது மெஹிதி ஹசனுக்கு அளிக்கப்பட்டது.
சட்டோகிராம்:
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இதையடுத்து, இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் கடந்த 28-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 227 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. சீன் வில்லியம்ஸ் 67 ரன்னும், நிக் வெல்ஸ் 54 ரன்னும் எடுத்தனர்.
வங்கதேசம் சார்பில் தைஜுல் இஸ்லாம் 6 விக்கெட்டும், நயீம் ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து, ஆடிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 444 ரன்கள் குவித்தது. ஷத்மான் இஸ்லாம் சதமடித்து 120 ரன்கள் எடுத்தார். மெஹதி ஹசன் மிராஸ் சதமடித்து 106 ரன்கள் அடித்தார்.
ஜிம்பாப்வே சார்பில் வின்சென்ட் மசேகேசா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
217 ரன்கள் பின்னிலையுடன் ஜிம்பாப்வே அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. வங்கதேச அணியினரின் அபார பந்துவீச்சில் சிக்கி விக்கெட்டுகளை இழந்தது. இதனால் ஜிம்பாப்வே 2வது இன்னிங்சில் 111 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பென் கர்ரன் 46 ரன் எடுத்தார்.
இதன்மூலம் வங்கதேசம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வங்கதேசம் தரப்பில் மெஹதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டும், தைஜுல் இஸ்லாம் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் வங்கதேசம் சமன் செய்தது.
ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது மெஹிதி ஹசனுக்கு அளிக்கப்பட்டது.






