என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மகளிர் கிரிக்கெட்: சதம் விளாசிய மந்தனா- நியூசிலாந்துக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா
- இந்திய தரப்பில் மந்தனா சதம் விளாசினார்.
- இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
அகமதாபாத்:
நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஆட்டத்தில் இந்தியாவும், 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
இந்நிலையில் 3-வது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 232 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக புரூக் ஹாலிடே 86 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இந்திய தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா- சஃபாலி வர்மா களமிறங்கினர். சஃபாலி வர்மா 12 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யாஷிகா பாட்டியா 35 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனையடுத்து மந்தனா- கவூர் ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தனர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மந்தனா சதம் விளாசி அசத்தினார். அத்துடன் ஆட்டமும் இழந்தார். மறுபுறம் கவுர் தனது அரை சதத்தை பதிவு செய்தார். இறுதியில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.






