என் மலர்
கிரிக்கெட் (Cricket)

நாளை 4வது போட்டி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடரை இந்திய அணி வெல்லுமா?
- மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது.
- இரு அணிகள் இடையிலான 4வது டி20 போட்டி நாளை லக்னோவில் நடக்கிறது.
லக்னோ:
இந்தியா-தென் ஆப்பி ரிக்கா அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 ஓவரில் 3 ஆட்டத்தின் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது.
கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் 101 ரன் வித்தியாசத்திலும், தர்மசாலாவில் நடந்த 3-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது.
நியூ சண்டிகரில் நடந்த 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
கடைசி 2 போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உடல் நலம் சரியில்லாததால் அக்சர் படேல் விலகியுள்ளார். கடந்த ஆட்டத்திலும் அவர் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக ஷாபாஸ் அகமது அணிக்கு தேர்வாகியுள்ளார்.
31 வயதான ஷாபாஸ் அகமது 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டி20 ஆட்டத்தில் இந்தியாவுக்காக விளையாடி இருக்கிறார். நாளைய ஆட்டத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே. ஏனென்றால் 3-வது போட்டியில் அக்சர் படேல் இடத்தில் குல்தீப் யாதவ் 2 விக்கெட் கைப்பற்றினார்.
பேட்டிங்கில் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடுகிறார். முதல் 2 ஆட்டத்திலும் சொதப்பிய சுப்மன் கில் கடந்த போட்டியில் சராசரி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரன்களை எடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.
மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணிக்கு இந்த ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய நெருக்கடி உள்ளது. இதில் தோற்றால் தொடரை இழந்துவிடும். அந்த அணி இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்யும் வேட்கையில் உள்ளது.
கேப்டன் மார்க்ரம், குயின்டன் டி காக், பிரேவிஸ், மில்லர், யான்சென், நிகிடி, டொனவன் பெராரியா போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.
இரு அணிகளும் 34 டி20 போட்டியில் மோதியுள்ளன. இதில் இந்தியா 20-ல், தென் ஆப்பிரிக்கா 13-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.






