என் மலர்
கிரிக்கெட் (Cricket)

U19 உலகக் கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா..!
- 40.2 ஓவர்கள் மட்டுமே இங்கிலாந்தால் தாக்குப்பிடித்தது.
- பால்கனர் சதம் அடித்தாலும் 311 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள ஹாராரேயில் நடைபெற்றது. இதில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. வைபவ் சூர்யவன்ஷியின் அபார சதத்தால் இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் குவித்தது. சூர்யவன்ஷி 80 பந்தில் 15 பவுண்டரி, 15 சிக்சருடன் இந்த ரன்களை குவித்தார். ஆயுஷ் மாத்ரே 51 பந்தில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
வேதாந்த் திரிவேதி 36 பந்தில் 32 ரன்களும், விஹான் மல்கோத்ரா 36 பந்தில் 30 ரன்களும், அபிக்யான் கந்து 31 பந்தில் 40 ரன்களும் எடுத்தனர். கனிஷ்க் சவுகான் ஆட்டமிழக்கால் 20 பந்தில் 37 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் 412 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர் பென் டாவ்கின்ஸ் 56 பந்தில் 66 ரன்கள் சேர்த்தார். பென் மேய்ஸ் 28 பந்தில் 45 ரன்கள் விளாசினார். அதன்பின் சீரான இடைவெளியில் இங்கிலாந்து விக்கெட்டுகளை இழந்தாலும் கலெப் பால்கனர் அபாரமாக விளையாடி 67 பந்தில் 115 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து 40.2 ஓவரிலேயே 311 ரன்கள் எடுத்து அல்அவுட் ஆனது. இதனால் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியில் அம்ப்ரிஸ் 3 விக்கெட்டும் தேவேந்திரன், கனிஷ்க் சவுகான் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 6-வது முறையாக இளையோர் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.






