என் மலர்
கிரிக்கெட் (Cricket)

உலக கோப்பைக்கான அனைத்து நடுவர்களும் பெண்கள்: கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறை என ஐசிசி அறிவிப்பு
- 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா நடத்துகிறது.
- பாகிஸ்தான் போட்டிகள் மட்டும் கொழும்பில் நடத்தப்படுகிறது.
8 அணிகள் பங்கேற்கும் பெண்களுக்கான 13ஆவது உலகக் கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடரை இந்தியா நடத்துகிறது. 33 நாட்களாக நடைபெறும் இந்த மெகா தொடரில், 31 போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன.
இந்த நிலையில் போட்டிக்கான நடுவர் குழுவை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் இடம் பிடித்துள்ள 14 கள நடுவர்கள், நான்கு போட்டி நடுவர்கள் (match referee) என அனைவரும் பெண்கள் ஆவார்கள். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதன்முறையாக முழுவதும் பெண்கள் கொண்ட நடுவர் குழுவை ஐசிசி அறிவித்துள்ளது.
கள நடுவர்கள் பட்டியலில் கிளைர் போலாசாக், ஜேக்லின் வில்லியம்ஸ், சுயே ரெட்பெர்ன் உள்ளிட்ட சிறந்த பெண் கள நடுவர்கள் இடம்பிடித்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே இரண்டு உலக கோப்பை தொடரில் நடுவர்களாக பணியாற்றியுள்ளனர். லாரன் அகன்பாக் என்பவர் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நடுவராக பணியாற்றியவர்.
மகளிர் கிரிக்கெட்டின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம், விளையாட்டின் அனைத்துத் துறைகளிலும் இன்னும் பல வெற்றிக் கதைகளுக்கு வழி வகுக்கும் என்று ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வருகிற 30ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை இந்தத் தொடர் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் மோதும் போட்டிகள் அனைத்தும் கொழும்பில் நடைபெற இருக்கிறது.
இதற்கு முன்னதாக பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டி, இரண்டு ஐசிசி பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடரில் பெண்கள் மட்டுமே நடுவராக செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.






