என் மலர்
கிரிக்கெட் (Cricket)

வெற்றியே பெறாத மைதானத்தில் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? 2-வது டெஸ்ட் நாளை தொடக்கம்
- இங்கிலாந்து- இந்தியா மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நாளை தொடங்குகிறது.
- பர்மிங்காமில் இந்திய அணி வெற்றி பெற்றது இல்லை.
பர்மிங்காம்:
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் லீட்சில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இதனால் 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நாளை (2-ந்தேதி) தொடங்குகிறது.
லீட்ஸ் டெஸ்டில் 5 சதம் அடித்தும், 835 ரன் குவித்தும் (முதல் இன்னிங்ஸ் 471 + 2-வது இன்னிங்ஸ் 364) இந்தியா தோற்றது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இந்த தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகவும் சவாலானது. மேலும் பர்மிங்காமில் இந்திய அணி வெற்றி பெற்றது இல்லை. இங்கு ஆடிய 7 டெஸ்டில் 6-ல் தோற்றது. ஒரு போட்டி டிரா ஆனது.
2-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அதிரடியான மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பந்துவீச்சு தான் சொதப்பலாக இருந்தது. பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர், ஜடேஜா ஆகியோரது பந்து வீச்சு ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. பேட்டிங்கில் சாய் சுதர்சன், கருண் நாயர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
இதனால் குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப், நிதீஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் வாய்ப்பில் இருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆடுவாரா? என்பது கடைசி நிமிடங்களில் தான் தெரியும்.
முதல் டெஸ்டில் 2 சதம் விளாசிய ரிஷப்பண்ட், ஜெய்ஸ்வால், கேப்டன் சுப்மன் கில், கே.எஸ்.ராகுல் 2-வது போட்டியிலும் தங்களது திறமையை வெளிப்படுத்துவது அவசியமாகும். மேலும் கடைசி கட்ட வீரர் கள் சிறப்பாக ஆடுவது முக்கியமானதாகும்.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி அதிரடியான ஆட்டத்தை வியூகமாக அமைத்துள்ளது. அதே நிலையை இந்த டெஸ்டிலும் கடைபிடிக்கும். 2-வது போட்டிக்கான அந்த அணியில் மாற்றமில்லை. ஆர்ச்சர் இடம் பெற்றாலும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் டக்கெட், அலி போப், ஹேரி புரூக், ஜோரூட், ஜேமி சுமித் ஆகியோரும் பந்துவீச்சில் ஜோஷ்டங், கேப்டன் பென் ஸ்டோக்ஸ், கார்ஸ் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
நாளைய டெஸ்ட் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி டென் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.






