என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஜோ ரூட் அசத்தல்: 2வது ஒருநாள் போட்டியில் இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து
- முதலில் பேட் செய்த இலங்கை அணி 49.3 ஓவரில் 219 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இங்கிலாந்து ஜோ ரூட்டின் அசத்தலான ஆட்டத்தால் வெற்றி பெற்றது.
கொழும்பு:
இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கான 2வது ஒருநாள் போட்டி கொழும்புவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 49.3 ஓவரில் 219 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சரித் அசலங்கா 45 ரன்னும், தனஞ்செய டி சில்வா 40 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித், ஜோ ரூட், ஜேமி ஓவர்டன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ஜோ ரூட் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 75 ரன்கள் எடுத்தார். ஹாரி புரூக் 42 ரன்னும், பென் டக்கெட் 39 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், இங்கிலாந்து 46.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 223 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன், இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் 1-1 என சமனிலை வகிக்கிறது.
இலங்கை அணி சார்பில் தனஞ்செய டி சில்வா, ஜெப்ரி வாண்டர்சே தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது ஜோ ரூட்டுக்கு அளிக்கப்பட்டது.






