என் மலர்
கிரிக்கெட் (Cricket)

5வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: டி20 தொடரை 3-2 என கைப்பற்றியது இந்தியா
- இரு அணிகள் மோதிய ஐந்தாவது டி 20 போட்டி நடைபெற்றது.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
லண்டன்:
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகளில் இந்தியா 3-1 என தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகள் மோதும் ஐந்தாவது டி20 போட்டி நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 75 ரன்னில் அவுட்டானார்.
இங்கிலாந்து சார்பில் சார்லி டீன் 3 விக்கெட்டும், சோபி எக்கல்ஸ்டோன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து மகளிர் அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகள் அதிரடியாக ஆடினர்.
முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்த நிலையில், சோபியா டங்க்ளே 46 ரன்னில் அவுட்டானார். டேனில் வியாட் ஹாட்ஜ் அரை சதம் கடந்து 56 ரன்னில் வெளியேறினார். பவுசியர் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். டாமி பியூமாண்ட் 30 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், இங்கிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. ஆனாலும், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 3-2 என கைப்பற்றி அசத்தியது.






