என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    அடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி
    X

    அடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி

    • முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணியின் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவாக அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 337 ரன் குவித்தது.

    ஆஸ்திரேலியா சார்பில் டிராவிஸ் ஹெட் 140 ரன்களையும், லபுஷேன் 64 ரன்களையும் எடுத்தனர். பும்ரா, முகமது சிராஜ் தலா நான்கு விக்கெட் கைப்பற்றினர். நிதிஷ் குமார் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    157 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்தியா அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன் எடுத்து தடுமாறிய நிலையில் இருந்தது. ரிஷப் பண்ட் 28 ரன்னும், நிதிஷ்குமார் ரெட்டி 15 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்தியா தரப்பில் கே.எல். ராகுல் ( 7 ரன்), ஜெய்ஸ்வால் (24), வீராட் கோலி (11), சுப்மன் கில் (28), ரோகித் சர்மா (6) ஆகியோர் பெவிலியன் திரும்பினர்.

    இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க மேலும் 29 ரன் தேவை என்ற நிலையில் கைவசம் 5 விக்கெட் இருந்த நிலையில் தொடர்ந்து ஆடியது. துவக்கம் முதலே அபார பந்துவீச்சில் மிரட்டிய ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்கள் இந்திய அணிக்கு கடும் சவாலை ஏற்படுத்தினர்.

    இதன் காரணமாக இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட் தனது விக்கெட்டை பறிக்கொடுத்து பெவிலியன் திரும்பினார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் தொடர்ந்து அவுட் ஆகி வெளியேறினர். எனினும், நிதிஷ் குமார் நிதானமாக ஆடி ரன் சேர்த்து வந்தார். அவரும் 42 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 175 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

    இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்ததோடு, ஆஸ்திரேலிய அணிக்கு 19 எனும் எளிய இலக்கை நிர்ணயித்தது. அதன்படி ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்களை துரத்தி பத்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    முன்னதாக பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றதன் மூலம் ஐந்து போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்றுசம நிலையை பெற்றது.

    இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகிற 14 ஆம் தேதி பிரிஸ்பேனில் தொடங்க இருக்கிறது.

    Next Story
    ×