என் மலர்
கிரிக்கெட் (Cricket)

வீடியோ: ஒரே பந்தில் 13 ரன்கள்.. 9 சிக்சர்களை பறக்கவிட்ட சஞ்சு சாம்சன்
- கேரளா கிரிக்கெட் லீக்கில் சஞ்சு சாம்சன் கொச்சி ப்ளூ டைகர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார்.
- இன்று நடந்த போட்டியில் 46 பந்துகளில் 9 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 89 ரன்களை குவித்தார்.
கேரள கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சஞ்சு சாம்சன் கொச்சி ப்ளூ டைகர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். முதல் 2 போட்டிகளில் நம்பர் 6 வரிசையில் ஆடிய சஞ்சு சாம்சன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இந்த நிலையில் 3-வது போட்டியில் களமிறங்கிய சஞ்சு சாம்சன், சதம் விளாசினார். இன்று நடந்த 4-வது போட்டியில் போட்டியில் 46 பந்துகளில் 9 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 89 ரன்களை குவித்தார்.
அதிலும் சிஜோமோன் ஜோசப் வீசிய 5-வது ஓவரில் சஞ்சு சாம்சன் 1 பந்தில் 13 ரன்கள் எடுத்தார். ஜோசப் நோ-பால் வீசியதால் இந்த சாதனையை சஞ்சு சாம்சன் படைத்தார். இதன் மூலமாக சஞ்சு சாம்சன் ஃபார்முக்கு திரும்பிவிட்டதாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஆசியக் கோப்பை டி20 தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதுதான் சந்தேகம்.
ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய மூவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் சுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளதால்,பிளேயிங் லெவனில் நிச்சயம் கொண்டு வரப்பட உள்ளதாக பார்க்கப்படுகிறது. பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் இடது - வலது கூட்டணியை விரும்புபவர்.
இதனால் சுப்மன் கில் - அபிஷேக் சர்மா கூட்டணியை கம்பீர் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால் சஞ்சு சாம்சனின் நிலை பரிதாபமாக மாறியதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டருக்கு கொண்டு செல்லப்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.






