search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய அணியில் 634 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
    X

    பவானி தேவி- சரத்கமல்

    ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய அணியில் 634 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

    • ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் தடகளத்தில் அதிகபட்சமாக 65 பேர் இடம் பெற்றுள்ளனர்.
    • ஹாக்கி அணியில் 36 வீரர், வீராங்கனைகளும், கிரிக்கெட் அணியில் 30 பேரும், துப்பாக்கி சுடுதல் அணியில் 30 பேரும், பாய்மரப்படகு அணியில் 33 பேரும் அங்கம் வகிக்கின்றனர்.

    புதுடெல்லி:

    1951-ம் ஆண்டு முதல் ஆசிய விளையாட்டு போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 48 விளையாட்டுகளில் இருந்து மொத்தம் 481 பந்தயங்கள் அரங்கேறுகிறது.

    இந்த போட்டியில் பங்கேற்க மொத்தம் 850 வீரர், வீராங்கனைகள் அடங்கிய பட்டியலை இந்திய ஒலிம்பிக் சங்கம், மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்து இருந்தது. இந்த பட்டியலில் இருந்து 38 விளையாட்டுகளை சேர்ந்த 634 வீரர், வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி ஆசிய போட்டியில் கலந்து கொள்ள மத்திய விளையாட்டு அமைச்சகம் நேற்று அனுமதி அளித்தது.

    ஆசிய விளையாட்டு போட்டிக்கு இந்தியா அனுப்பும் 'மெகா' எண்ணிக்கை கொண்ட அணி இதுதான். இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு ஜகர்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டில் அதிகபட்சமாக 572 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொண்டு 16 தங்கம் உள்பட 70 பதக்கங்களை வென்று 8-வது இடத்தை பிடித்து இருந்தது.

    ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் தடகளத்தில் அதிகபட்சமாக 65 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் 34 வீரர்கள், 31 வீராங்கனைகள் அடங்குவர். இதற்கு அடுத்தபடியாக கால்பந்து அணியில் 44 வீரர், வீராங்கனைகளும், ஹாக்கி அணியில் 36 வீரர், வீராங்கனைகளும், கிரிக்கெட் அணியில் 30 பேரும், துப்பாக்கி சுடுதல் அணியில் 30 பேரும், பாய்மரப்படகு அணியில் 33 பேரும் அங்கம் வகிக்கின்றனர்.

    பளுதூக்குதல், ஜிம்னாஸ்டிக்ஸ், ஹேண்ட்பால், ரக்பி ஆகிய விளையாட்டுகளில் வீரர்கள் யாருக்கும் அனுமதி கிடைக்கவில்லை. ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா (65 கிலோ) தகுதி சுற்று போட்டியில் கலந்து கொள்ளாவிட்டாலும், அவரது பெயரை மல்யுத்த சங்கத்தை நிர்வகிக்கும் ஒலிம்பிக் கமிட்டி பரிந்துரை செய்ததால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்திய அணியில் இடம் பெற்று இருப்பவர்களில் நீரஜ் சோப்ரா, ஜோதி யர்ராஜி (தடகளம்), பிரனாய், லக்ஷயா சென், பி.வி.சிந்து (பேட்மிண்டன்), ஷிவதபா, நிகாத் ஜரீன் (குத்துச்சண்டை), பவானி தேவி (வாள்வீச்சு), பிரித்விராஜ் தொண்டைமான், மானு பாகெர் (துப்பாக்கி சுடுதல்), சரத்கமல், சத்யன், மணிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்), மீராபாய் சானு (பளுதூக்குதல்), டி.குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி (செஸ்), சவுரவ் கோஷல், ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பலிக்கல் (ஸ்குவாஷ்), ரோகன் போபண்ணா, ராம்குமார் (டென்னிஸ்) உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

    Next Story
    ×