என் மலர்
விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா- ஓமன் இன்று மோதல்
- இந்திய அணியில் நிச்சயம் சில மாற்றங்கள் இருக்கும்.
- சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவும், ஓமனும் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறையாகும்.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்றுடன் லீக் சுற்று முடிவடைகிறது. அபுதாபியில் இன்று இரவு 8 மணிக்கு அரங்கேறும் கடைசி லீக்கில் நடப்பு சாம்பியனான இந்தியா, கத்துக்குட்டி அணியான ஓமனுடன் ( 'ஏ' பிரிவு) மோதுகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பாகிஸ்தானை துவம்சம் செய்து ஏற்கனவே சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறி விட்டது. அதே சமயம் ஜதிந்தர் சிங் தலைமையிலான ஓமன் தனது முதல் இரு ஆட்டங்களில் தோற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.
பலம் வாய்ந்த இந்திய அணி, ஓமனை எளிதில் வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றி பெறும் ஆர்வத்துடன் உள்ளது. இருப்பினும் துபாயுடன் ஒப்பிடும் போது அபுதாபி ஆடுகளம் சுழலுக்கு பெரிய அளவில் ஒத்துழைக்காது என்பது சமீபகாலத்தில் இங்கு நடந்த ஆட்டங்களின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. அதனால் இந்திய அணியில் நிச்சயம் சில மாற்றங்கள் இருக்கும். வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங்குக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவும், ஓமனும் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறையாகும். ஓமன் அணியின் கேப்டன் 36 வயதான ஜதிந்தர் சிங் பஞ்சாப்பை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் 1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.






