search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு (Sports)

    குவின்டன்  டி காக்
    X
    குவின்டன் டி காக்

    ஐபிஎல்: குவின்டன் டி காக் அதிரடி ஆட்டத்தால் லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

    முதலில் விளையாடிய டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்திருந்தது.
    மும்பை

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 15-வது லீக் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்  அணியும், ரி‌ஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீசுவதாக அறிவித்தது.  அதன்படி முதலில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

    அந்த அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா தொடக்கம் முதலே பவர்பிளே ஓவர்களை சிறப்பாக பயன்படுத்தி ரன்களை குவித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 30 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். பின்னர் கிருஷ்ணப்பா கெளதம் பந்துவீச்சில் பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். அவர் 34 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். 

    அவரை தொடர்ந்து பவல் 3 ரன்களிலும் வார்னர் 4 ரன்களிலும் வெளியேற டெல்லி அணி தடுமாற தொடங்கியது.  அதன்பிறகு அணியின் கேப்டன் பண்ட் உடன் சர்ப்ராஸ் கான் ஜோடி சேர்ந்தார். 50 ரன்கள் பாட்னர்ஷிப்பை கடந்த இந்த ஜோடி டெல்லி அணியை சரிவில் இருந்து மீட்டனர். பண்ட் 39 ரன்களுடனும் சர்ப்ராஸ் கான் 36 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

    இறுதியில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக குவின்டன்  டி காக் - கேப்டன் கே எல் ராகுல் களமிறங்கினர்.

    அதிரடியாக தொடங்கிய குவின்டன் டி காக்   36 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.  கே எல் ராகுல் 24 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டி காக் 52 பந்துகளில் 80 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். தீபக் ஹூடா 11 ரன் அடித்திருந்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

    பின்னர் ஜோடி சேர்ந்த குணால் பாண்ட்யா, ஆயுஷ் படோனி ஜோடி லக்னோ அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது. 19.4 ஓவர் முடிவில் லக்னோ அணி 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. 

    குணால் பாண்ட்யா 19 ரன்களுடனும், படோனி 10 ரன்னுடனும் கடைசி வரை களத்தில் இருந்தனர். இதையடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.

    Next Story
    ×