search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கங்குலி
    X
    கங்குலி

    ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல்: இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா செல்லுமா? சவுரவ் கங்குலி பதில்

    இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்லுமா? என்பது தொடர்பாக கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான கங்குலி பதில் அளித்து உள்ளார்.

    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துடன் விளையாடி வருகிறது. வருகிற 7-ந் தேதியுடன் நியூசிலாந்துடனான போட்டி முடிகிறது.

    பின்னர் இந்திய அணி தென் ஆப்பிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, நான்கு 20 ஓவர் ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டு உள்ளது.

    முதல் டெஸ்ட் போட்டி வருகிற 17-ந் தேதி ஜோகன்ஸ் பெர்க்கில் தொடங்குகிறது. ஜனவரி 26-ந் தேதி வரை இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் விளையாடுவதற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் கொரோனாவின் புதிய உருமாற்றமான ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் உலகம் முழுவதும் ஒரு பீதியை ஏற்படுத்தி உள்ளது. தென் ஆப்பிரிக்காவில்தான் இந்த வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக இந்தியஅணி தென் ஆப்பிரிக்கா செல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே இந்திய ‘ஏ’ அணி அங்கு விளையாடி வருகிறது.

    தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி கான்பூர் டெஸ்ட் முடிந்த பிறகு அறிவிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தது. ஆனால் தற்போது தேர்வுக் குழு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்லுமா? என்பது தொடர்பாக கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான கங்குலி பதில் அளித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    தற்போது வரை உள்ள சூழ்நிலையில் சுற்றுப்பயணம் இருக்கிறது. முடிவெடுக்க எங்களுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. டிசம்பர் 17-ந் தேதி முதல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது. நாங்கள் இன்னும் யோசிக்க வேண்டி உள்ளது.

    வீரர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்துக்கு கிரிக்கெட் வாரியம் எப்போதுமே முதல் முன்னுரிமையை கொடுக்கும். இதற்காக நாங்கள் முடிந்த அனைத்தையும் செய்வோம். வரும் நாட்களில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.

    ஹர்த்திக் பாண்ட்யா மிகச்சிறந்த வீரர் ஆவார். ஆனால் அவர் உடல் தகுதியுடன் இல்லை. தற்போது அணியில் இல்லாவிட்டாலும் பிரச்சினை இல்லை. அவர் இளம்வீரர்.

    காயத்தில் இருந்து குணமடைந்து அவர் அணிக்கு மீண்டும் திரும்புவார் என நம்புகிறேன். கபில்தேவுடன் ஹர்த்திக் பாண்ட்யாவை ஒப்பிட முடியாது.

    இவ்வாறு கங்குலி கூறி உள்ளார்.

    Next Story
    ×